சேலத்தில் 13 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள்
சேலத்தில் 13 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள்
சேலம், அக்.20-
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருட்டு சம்பவங்களை தடுக்க சேலத்தில் 13 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.
தீபாவளி பண்டிகை
தீபாவளி பண்டிகை வருகிற 4-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையை கொண்டாடுவதற்கு பொதுமக்கள் தயாராகி வருகின்றனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தாடைகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் வாங்குவதற்கு பொதுமக்கள் இப்போதே அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதனால் சேலம் பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், அழகாபுரம் உள்ளிட்ட மாநகரில் பல இடங்களில் உள்ள ஜவுளி கடைகள் உள்ளிட்ட கடைகளில் கூட்டம் அதிகளவு காணப்படுகிறது. தீபாவளி பண்டிகை நெருங்குவதால் வருகிற நாட்களில் மேலும் கூட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள் சிலர் பொதுமக்களிடம் இருந்து நைசாக பணம், நகை, செல்போன்கள் பறிக்கும் சம்பவமும் நடைபெற வாய்ப்புள்ளது.
கண்காணிப்பு கோபுரங்கள்
இந்த குற்றச்செயல்களை தடுக்கவும், திருடர்களின் நடமாட்டத்தை கண்காணிக்கவும் சேலம் பழைய பஸ் நிலையம் பகுதியில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி கோவில், ராஜகணபதி கோவில், அண்ணாசிலை, கடைவீதி உள்ளிட்ட 6 இடங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதேபோல் புதிய பஸ் நிலையம் பகுதியில் உள்ள டி.வி.எஸ். பஸ் நிறுத்தம், ராமலிங்கா ஜங்சன், 5 ரோடு, ஏ.வி.ஆர். ரவுண்டனா உள்ளிட்ட 7 இடங்களிலும் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்படுகிறது.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறும் போது, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சேலத்தில் 13 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் முடிவடைந்தவுடன் கண்காணிப்பு கோபுரத்தில் போலீசார் நின்றுக்கொண்டு தொலைநோக்கி மூலம் திருடர்களின் நடமாட்டத்தை கண்காணிப்பார்கள். மேலும் அந்தந்த பகுதிகளில் பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் போலீசார் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் என்றனர்.
Related Tags :
Next Story