‘தினத்தந்தி’ புகார் பெட்டி


‘தினத்தந்தி’ புகார் பெட்டி
x
தினத்தந்தி 20 Oct 2021 7:31 PM IST (Updated: 20 Oct 2021 7:31 PM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

பாதாள சாக்கடையில் அடைப்பு

நெல்லை மாநகராட்சி 50-வது வார்டு பழைய பேட்டையில் அமைந்துள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியான சமூக ரெங்கையன் கட்டளை பகுதியில் பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அதில் இருந்து கழிவுநீர் கசிந்து பல நாட்களாக ஆறுபோல ஓடுகிறது. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, பாதாள சாக்கடை அடைப்பை சரிசெய்வதற்கு மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாலசுப்பிரமணியன், பழைய பேட்டை.

முள்செடிகள் அகற்றப்படுமா?

நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா விஜயாபதி பஞ்சாயத்து காடுதுலா குளம் வழியாக மேற்கு நோக்கி செல்லும் சாலையின் இருபுறமும் முள்செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளது. இதனால் இருசக்கர வாகனங்களில் இரவு நேரத்தில் அந்த வழியாக வருவோருக்கு பெரிதும் இடையூறை ஏற்படுத்துகிறது. எனவே, முள்செடிகளை அகற்றுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்.

பழுதடைந்த அங்கன்வாடி கட்டிடம்

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி நகரப்பஞ்சாயத்து 8-வது வார்டு குறக்குடி பச்சேரி தெருவில் இயங்கி வரும் அங்கன்வாடி மையம் கட்டிடத்துக்கு தினமும் குழந்தைகள் சென்று வருகிறார்கள். தற்போது அந்த கட்டிடம் பழுதடைந்து இடிந்துவிழும் நிலையில் உள்ளது. மேலும் இந்த மையத்துக்கு வரும் மின்ஒயர்கள் அறுந்து விழும் நிலையில் தொங்கியபடி காணப்படுகிறது. இதனால் எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.
முருகன், கல்லிடைக்குறிச்சி.

மின்விளக்கு வசதி

திசையன்விளை பேரூராட்சி, தாலுகா தலைநகரமாகவும் விளங்குகிறது. திசையன்விளையின் முக்கிய பகுதியாக விளங்குவது பழைய பஸ்நிலைய சந்திப்பு. இதில் போதுமான மின்விளக்கு வசதி செய்யப்படாததால் இரவு நேரத்தில் போதிய வெளிச்சம் இன்றி காணப்படுகிறது. நகரின் முக்கிய பகுதியான இந்த இடம் இருள் அடைந்து காணப்படுவது மிகவும் வேதனைக்கு உரியதாக உள்ளது. எனவே, மின்விளக்கு வசதி செய்து கொடுப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
கே.எஸ்.ஞானராஜ், திசையன்விளை.

நாய் தொல்லை

தென்காசி மாவட்டம் வடகரையில் நாய் தொல்லை அதிகமாக உள்ளது. இதுவரை 7-க்கும் மேற்பட்ட நபர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் சிறுவன் ஒருவனையும் தெருநாய் கடித்துள்ளது. எனவே, தெருநாய் தொல்லையை கட்டுப்படுத்த வடகரை நகரப்பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.
அப்துல் பாசித், வடகரை.

குவிந்து கிடக்கும் குப்பைகள்

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி வடக்கு காலன்குடியிருப்பு மெயின் ரோட்டில் குப்பைக்கூளங்கள் குவிந்து கிடக்கிறது. அதன் அருகில் வாறுகால் உடைந்து கழிவுநீரும், அந்த குப்பைக்கூளங்களுடன் கலந்து போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக உள்ளது. அதன் அருகில் குடிநீர் குழாயில் தண்ணீர் வரும்போது பெண்கள் கூட்டம் கூட்டமாக நின்று தண்ணீர் எடுத்துச் செல்கின்றனர். எனவே, அங்கு தினசரி சேரும் குப்பைகளை அகற்ற வேண்டும். மேலும், சாக்கடை கழிவையும் அகற்றி சுத்தம் செய்ய வேண்டும். இதற்கு அதிகரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.
சரவணன், உடன்குடி.

பஸ் வசதி

கோவில்பட்டியில் இருந்து துறையூர், காமநாயக்கன்பட்டி வழியாக கொப்பம்பட்டி செல்லும் அரசு டவுன் பஸ்கள் தினமும் காலை 7.30 மணிக்குள் சென்று விடுகின்றன. அதன் பின்னர் 9 மணி வரை வெளியூர் செல்லும் தனியார் பஸ்களே உள்ளன. இதனால் பள்ளி செல்லும் குழந்தைகளும், பெண்களும் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, காலை 8 மணி முதல் 9 மணி வரையிலான இடைப்பட்ட நேரத்தில் பசுவந்தனை வரை அரசு டவுன் பஸ் ஒன்றை இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அ.பாலகிருஷ்ணன், துறையூர்.

வாறுகால் கட்டித்தரப்படுமா?

விளாத்திகுளம் நகரப்பஞ்சாயத்து 9-வது வார்டு மீரான்பாளையம் ெதருவில் (முத்து மாரியம்மன் கோவில் அருகே கிழக்குபுறம்) பல வருடங்களாக முறையான கழிவுநீர் வாறுகால் வசதி இல்லை. இதனால் தெருக்களில் கழிவுநீர் ஓடுவதால் வாகனத்தில் செல்பவர்கள் மற்றும் குழந்தைகள் வழுக்கி கீழே விழும் நிலை ஏற்படுகிறது. எனவே, வாறுகால் கட்டிக் கொடுப்பதற்கு பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுப்பார்களா?
இ.ஆறுமுகச்சாமி, விளாத்திகுளம்.

Next Story