ஏமரால்டில் 50 படுக்கை வசதிகளுடன் அரசு மருத்துவமனை


ஏமரால்டில் 50 படுக்கை வசதிகளுடன் அரசு மருத்துவமனை
x
தினத்தந்தி 20 Oct 2021 8:05 PM IST (Updated: 20 Oct 2021 8:05 PM IST)
t-max-icont-min-icon

ஏமரால்டில் 50 படுக்கை வசதிகளுடன் அரசு மருத்துவமனை

ஊட்டி

எமரால்டில் 50 படுக்கை வசதிகளுடன் அரசு மருத்துவமனை கட்டப்பட்டு உள்ளது என்று இணை இயக்குனர் தெரிவித்தார்.

மருத்துவ சிகிச்சை

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே எமரால்டு கிராமம் உள்ளது. இதன் சுற்று வட்டாரத்தில் 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மருத்துவ சிகிச்சைக்காக ஊட்டி அல்லது மஞ்சூர் அரசு மருத்துவமனைகளுக்கு 20 கிலோ மீட்டர் தூரத்துக்கு மேல் செல்ல வேண்டிய நிலை காணப்பட்டது. 

இதனால் முதியோர்கள், கர்ப்பிணிகள் மருத்துவ சிகிச்சைக்காக உரிய நேரத்தில் செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டு வந்தனர். பிரசவத்துக்கு நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய நிலை இருந்தது.

இதையடுத்து எமரால்டு பகுதியில் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு மருத்துவமனை கட்ட திட்டமிடப்பட்டு, 3 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. அங்கு வட்டம் சாரா மருத்துவமனை அமைக்க ரூ.19 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, கடந்த 2018-ம் ஆண்டு பணிகள் தொடங்கியது.

 மலைப்பிரதேசம் என்பதால் தரை தளம், முதல் தளம் என்ற அடிப்படையில் மருத்துவமனை கட்டப்பட்டு உள்ளது. மருத்துவ வசதிகள், ஆம்புலன்ஸ் நிறுத்த இடங்கள் என அமைக்கப்பட்டு இருக்கிறது. மருத்துவமனை கட்டுமான பணிகள் முடியும் தருவாயில் உள்ளது.

இதுகுறித்து நீலகிரி மாவட்ட மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் பழனிசாமி கூறியதாவது:-

50 படுக்கை வசதிகள்

எமரால்டு அரசு மருத்துவமனையில் பொது மருத்துவம், அறுவை சிகிச்சை, குழந்தைகள் நலம், மகப்பேறு, விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு உள்பட 9 வார்டுகள் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் எக்ஸ்ரே, ஸ்கேன், அறுவை சிகிச்சை அரங்கம் ஆகிய வசதிகள் செய்யப்பட்டு இருக்கிறது.

 நோயாளிகளுக்கு ரத்த பரிசோதனை செய்வதற்கு ஆய்வகம் உள்ளது. கர்ப்பிணிகள் பரிசோதனை, பிரசவம் போன்றவை இங்கேயே பார்க்கப்படும்.
50 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கு ஆக்சிஜன் வசதி கொடுக்க 25 சிலிண்டர்கள் பொருத்தப்படுகிறது.

பிணவறை கட்டப்பட்டு உள்ளது. நவீன வசதியுடன் கூடிய எமரால்டு அரசு மருத்துவமனை மூலம் ஒரு லட்சம் பேர் பயன் பெறுவார்கள். மின் வசதிகள் கொடுக்கும் பணி நடந்து வருகிறது. முடியும் தருவாயில் இருப்பதால், வருகிற ஒரு மாதத்தில் திறக்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story