ஆட்கொல்லி புலியை பாதுகாக்கப்பட்ட திறந்த வெளியில் விட வனத்துறை திட்டம்
ஆட்கொல்லி புலியை பாதுகாக்கப்பட்ட திறந்த வெளியில் விட வனத்துறை திட்டம்
கூடலூர்
மைசூரு மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வரும் ஆட்கொல்லி புலியை பாதுகாக்கப்பட்ட திறந்தவெளியில் விட வனத்துறையினர் திட்டமிட்டுள்ளதாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
சிகிச்சை
கூடலூர், மசினகுடி பகுதியில் ஏராளமான கால்நடைகளையும், 4 பேரையும் கொன்ற ஆட்கொல்லி புலியை பிடிக்கும் பணி 21 நாட்களாக நடைபெற்று வந்தது. வனத்துறையினரின் தொடர் தேடுதல் வேட்டையால் கடந்த 15-ந் தேதி மசினகுடி வனத்தில் பதுங்கியிருந்த ஆட்கொல்லி புலியை மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர்.
அப்போது புலியின் உடலில் பல இடங்களில் காயங்கள் இருப்பதை வனத்துறையினர் உறுதி செய்தனர். இதைத் தொடர்ந்து கர்நாடக மாநிலம் மைசூர் உயிரியல் பூங்காவில் உள்ள வனவிலங்கு மறுவாழ்வு சிகிச்சை மையத்திற்கு இரவோடு இரவாக ஆட்கொல்லி புலி கொண்டு செல்லப்பட்டது.
தொடர்ந்து கடந்த 5 நாட்களாக ஆட்கொல்லி புலிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் காயங்கள் குணமடைந்து ஆட்கொல்லி புலியின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தமிழக முதன்மை வன உயிரின பாதுகாவலர் சேகர் குமார் நீரஜ் கூறியுள்ளதாவது:-
பாதுகாக்கப்பட்ட வெளியில் விட திட்டம்
ஆட்கொல்லி புலி தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால் அதன் காலில் இருந்த காயம் குணமடைந்து வருகிறது. மேலும் 8 கிலோ மாட்டிறைச்சி சாப்பிட்டது. புலியின் உடலில் ரத்த அணுக்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. மேலும் பரிசோதனையின் போது புலியின் கல்லீரல் சிறிது வீங்கி உள்ளது தெரியவந்துள்ளது.
புலியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் அடிக்கடி ஆக்ரோஷத்துடன் காணப்படுகிறது. மேலும் இரும்புக் கூண்டில் அடைக்கப்பட்டு உள்ளதால் அதை கடித்து உடைப்பதற்காக பலமுறை முயற்சி செய்துள்ளது.
இதில் புலியின் கோரப்பல் ஒன்று உடைந்து விட்டது. மன அழுத்தம் காரணமாக புலி இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறது. இதனால் மறுவாழ்வு மையத்தில் உள்ள பாதுகாக்கப்பட்ட திறந்தவெளியில் ஆட்கொல்லி புலியை விட திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story