அருணாச்சலேஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம் மழையையும் பொருட்படுத்தாது பக்தர்கள் காத்திருந்து தரிசனம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஐப்பசி பவுர்ணமியையொட்டி நடந்த அன்னாபிஷேகத்தில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது திரளான பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஐப்பசி பவுர்ணமியையொட்டி நடந்த அன்னாபிஷேகத்தில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது திரளான பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
அன்னாபிஷேகம்
ஐப்பசி பவுர்ணமியான நேற்று அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடந்தது. இதனையொட்டி சாதம் வடிக்கப்பட்டு சிவனுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்யப்பட்டு காய்கனிகளால் அலங்காரம் செய்யப்படும்.
அதன்படி திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று மதியம் அன்னாபிஷேகம் நடைபெற்றது. அப்போது கோவிலில் உள்ள சிவ லிங்கங்களுக்கு மதியம் 3 மணி முதல் மாலை 6 மணி வரை சாமிக்கு அன்னத்தால் அலங்காரம் நடைபெற்றது.
அந்த சமயத்தில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் பக்தர்கள் ராஜகோபுரம் முன்பும், அம்மணி அம்மன் கோபுரம் முன்பும் காத்திருந்தனர்.
இதற்கிடையில் மாலை 3 மணி முதல் 4 மணி வரை திருவண்ணாமலையில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. மழையையும் பொருட்படுத்தாமல் கோபுரங்கள் முன் நனைந்தவாறு பக்தர்கள் காத்திருந்தனர். தொடர்ந்து 6 மணிக்கு பின்னர் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து நீண்ட வரிசையில் நின்று அவர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.
கண்ணமங்கலம்
இதேபோல் கண்ணமங்கலம் மற்றும் காட்டுக்காநல்லூரில் உள்ள ராமநாதீஸ்வரர் கோவில்களில் மூலவருக்கு அன்னத்தால் அலங்காரமும், அம்மனுக்கு காய்கறி மாலைகளால் காதம்பரி அலங்காரம் செய்து தீபாராதனை நடைபெற்றது.
மேல்நகர் திருக்காமேஸ்வரர், அத்திமலைப்பட்டு அருணாசலேஸ்வரர், படவேடு சோமநாதீஸ்வரர், அம்மையப்பீஸ்வரர், சந்தவாசல் மீனாட்சிசுந்தரேஸ்வரர்், ஒண்ணுபுரம் கச்சபேஸ்வரர், புதுப்பாளையம் விருபாட்சீஸ்வரர் கோவில்களில் நடந்த அன்னாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கொளத்தூர்
கண்ணமங்கலம் அருகே உள்ள கொளத்தூர் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் நேற்று மாலை ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு மூலவருக்கு அன்னாபிஷேகம், அம்மனுக்கு காதம்பரி அலங்காரம் செய்து தீபாராதனை நடைபெற்றது. இதேபோல் கொளத்தூர் நல்ல தண்ணீர் குளக்கரையில் அமைந்துள்ள 108 சிவலிங்க திருமேனியுடன் காட்சி தரும் நன்னீர் குளத்தீஸ்வரருக்கும், நந்தி பகவானுக்கும் அன்னத்தால் அலங்காரம் செய்து தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story