ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு


ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 20 Oct 2021 10:04 PM IST (Updated: 20 Oct 2021 10:04 PM IST)
t-max-icont-min-icon

ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி, மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

முருகபவனம்:
ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி, மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. 
ஐப்பசி மாத பவுர்ணமி
ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் வரும் பவுர்ணமி நாளில் சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். அதன்படி பவுர்ணமி நாளான நேற்று திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் மாலை 4 மணியளவில் சுவாமி பத்மகிரீஸ்வரர் மற்றும் காளத்தீசுவரருக்கு பால், பழம், பன்னீர் உள்பட 16 வகையான சிறப்பு அபிஷேகம் நடந்தது. 
அதைத்தொடர்ந்து அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி சுவாமி சிலை முழுவதும் அன்னத்தால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதேபோல் திண்டுக்கல் ரெயிலடி சித்திவிநாயகர் கோவிலில் உள்ள சுவாமி கைலாசநாதருக்கு சிறப்பு அபிஷேகம், அன்னத்தால் அலங்காரம் நடைபெற்றது.
 மேலும் திண்டுக்கல் காந்திஜி புதுரோடு ஆதிசிவன் கோவில், முள்ளிப்பாடி திருக்காமேஸ்வரர்-கோகிலாம்பாள் கோவில் உள்பட திண்டுக்கல்லில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி அன்னாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த கோவில் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.
பழனி, நத்தம்
பழனி மதனபுரம் அண்ணாமலை-உண்ணாமுலை நாயகி அம்மன் கோவிலில் பவுர்ணமியையொட்டி சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், சங்காபிஷேகம் நடைபெற்றது. பழனி முருகன் கோவிலில் உள்ள கைலாச நாதர் சன்னதி, பெருவுடையார் கோவில், கோதமங்கலம் கோதீஸ்வரர் கோவில், பெரியநாயகி அம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு சிவன் கோவில்களில் சுவாமிக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், அலங்காரம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் பழனியை அடுத்த அமரபூண்டி அமர லிங்கேஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது. 
நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் உள்ள சிவன் கோவிலில் ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி அன்னாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் நடைபெற்று சிறப்பு அலங்காரம், பூஜை நடைபெற்றது. பின்னர் மூலவர் கைலாசநாதர், செண்பக வள்ளி அம்மனுக்கு விசேஷ பூஜைகள் நடந்தது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். 
பட்டிவீரன்பட்டி
பட்டிவீரன்பட்டியில் உள்ள ஜோதிலிங்கேஸ்வரர் கோவிலில் சுவாமிக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி ஜோதிலிங்கேஸ்வரருக்கு சந்தனம், பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகம் மற்றும் அன்னம், காய்கறி, பழங்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Next Story