நத்தத்தில் டிரைவர், கண்டக்டர் பற்றாக்குறையால் நிறுத்தப்படும் அரசு பஸ்கள்
நத்தத்தில் டிரைவர், கண்டக்டர் பற்றாக்குறையால் அரசு பஸ்கள் நிறுத்தப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
நத்தம், அக்.21-
நத்தம் அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் இருந்து 40-க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் நத்தம் பணிமனையில் கண்டக்டர், டிரைவர் பற்றாக்குறை உள்ளது. இதனால் நத்தம் பகுதியை சுற்றியுள்ள கிராமங்களுக்கு இயக்கப்படும் டவுன் பஸ்கள் இயக்கப்படாமல் பணிமனையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
குறிப்பாக நத்தத்தில் இருந்து பாலமேடு வழியாக அலங்காநல்லூருக்கு இயக்கப்படும் டவுன் பஸ் நிறுத்தப்பட்டுள்ளது. இதேபோல் லிங்கவாடி வழியாக வாடிப்பட்டி, அருக்கம்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படும் 5 டவுன் பஸ்களும் நிறுத்தப்பட்டுள்ளன. இதற்கு முன்பு இந்த பஸ்கள் அந்தந்த வழித்தடங்களில் தினசரி இயக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது அந்த பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் கிராமப்புற மக்கள், பள்ளி மாணவ-மாணவிகள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே நத்தம் பணிமனையில் உள்ள பணியாளர் பற்றாக்குறையை போக்க மாவட்ட நிர்வாகமும், அரசு போக்குவரத்து கழகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அரசு போக்குவரத்துக்கழக பணியாளர் ஒருவர் கூறுகையில், நத்தம் பணிமனையில் 20-க்கும் மேற்பட்ட டிரைவர், கண்டக்டர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணிகளுக்கு புதிதாக கண்டக்டர், டிரைவர்கள் இதுவரை தேர்வு செய்யப்படவில்லை. பணியாளர் பற்றாக்குறையால் குறிப்பிட்ட வழித்தடங்களில் அரசு பஸ்களை இயக்க முடியவில்லை என்றார்.
Related Tags :
Next Story