சிவன் கோவில்களில் அன்னாபிஷேக விழா


சிவன் கோவில்களில் அன்னாபிஷேக விழா
x
தினத்தந்தி 20 Oct 2021 11:11 PM IST (Updated: 20 Oct 2021 11:11 PM IST)
t-max-icont-min-icon

ஐப்பசி மாத முதல் பவுர்ணமியை முன்னிட்டு சிவன் கோவில்களில் அன்னாபிஷேக விழா நடைபெற்றது.

சிங்கம்புணரி, 
ஐப்பசி மாத முதல் பவுர்ணமியை முன்னிட்டு  சிவன் கோவில்களில் அன்னாபிஷேக விழா நடைபெற்றது.
அன்னாபிஷேகம்
 ஐப்பசி மாத பவுர்ணமி தினத்தன்று சிவாலயங்களில் அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். இதன்படி  சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர், சிங்கம்புணரி, எஸ்.புதூர், மானாமதுரை, திருப்புவனம், தேவகோட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள சிவன் கோவில்களில் அன்னாபிஷேக விழா நடைபெற்றது. 
 சாமிக்கு அன்னாபிஷேகத்தின் போது அப்பம், வடை உள்ளிட்ட பலகாரங்களையும் காய்கள், கனி வகைகளையும் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது. எஸ்.புதூர் அருகே உள்ள உலகம்பட்டி உலகநாயகி சமேத உலகநாத சாமி மற்றும் கரிசல்பட்டி கைலாசநாதர் சாமிக்கு அன்னாபிஷேக விழா நடைபெற்று சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
காய், கனிகள் அலங்காரம்
இதேபோல் சிங்கம்புணரி பகுதியில் உள்ள பிரான்மலை, அரளிப்பாறை, சிவபுரிபட்டி, முறையூர் ஆகிய பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் அன்னாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனத்திற்குட்பட்ட பிரான்மலையில் உள்ள திருகொடுங்குன்றநாதர் சாமி, அரளிப்பாறை குகை அண்ணா மலையார் கோவிலில் உள்ள சிவனுக்கு அன்னாபிஷேக விழா நடைபெற்றது. முன்னதாக சிவபெருமானுக்கு 16 வகையான பொருட்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து அன்னத்தை கொண்டு சிவலிங்கத்திற்கு சாத்தப்பட்டு காய்கறி, கனி அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. 
நிகழ்ச்சியில் குன்றக்குடி தவத்திரு பொன்னம்பல அடிகளார், உமாபதி சிவாச்சாரியார், கோவில் மணியார் சோமன் மற்றும் ஐப்பசி மாத அன்னாபிஷேக விழாக்குழுவினர்கள் செந்தில், சண்முகம் உள்பட பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
16 வகை அபிஷேகம்
 இதேபோல் சிவபுரிபட்டி தர்மஷம் வர்த்தினி உடனுறை தான்தோன்றீஸ்வரர் கோவில் மற்றும் முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோவிலில் அன்னாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. சிவபுரிபட்டி கோவிலில் ரவி குருக்கள் தலைமையில் சிவபெருமானுக்கு 16 வகையான அபிஷேகம் செய்யப்பட்டு சாமிக்கு அன்னாபிஷேக அலங்காரத்தில் சிறப்பு தீபாரதனை காட்டப்பட்டது. 
இதேபோல் முறையூர் கோவிலில் சுரேஷ் குருக்கள் தலைமையில் சிறப்பு வழிபாடு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் ஏராளமாக பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் சிறப்பு அன்னதானம் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
 இதேபோல் காரைக்குடி, தேவகோட்டை, காளையார்கோவில், திருப்பத்தூர், கே.வைரவன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம் நடந்தது.  இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Next Story