ரெயில்வேயில் வேலை வாங்க முயன்ற தாய்-மகன் மீது வழக்கு


ரெயில்வேயில் வேலை வாங்க முயன்ற தாய்-மகன் மீது வழக்கு
x
தினத்தந்தி 21 Oct 2021 1:29 AM IST (Updated: 21 Oct 2021 1:29 AM IST)
t-max-icont-min-icon

போலி ஆவணம் கொடுத்து ரெயில்வேயில் வேலை வாங்க முயன்ற தாய்-மகன் மீது திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திருச்சி, அக்.21-
போலி ஆவணம் கொடுத்து ரெயில்வேயில் வேலை வாங்க முயன்ற தாய்-மகன் மீது திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ரெயில்வேயில் வேலை கேட்டு விண்ணப்பம்
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை நரசய்யர்தெருவை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவர் திருச்சி பொன்மலை ரெயில்வே பணிமனையில் பணியாற்றி வந்தார். இவர் கடந்த 2017-ம் ஆண்டு பணியின்போது, இறந்து விட்டார்.
இதையடுத்து ராதாகிருஷ்ணனின் மனைவி வரலெட்சுமி திருச்சி கோட்ட ரெயில்வே அலுவலக சிறப்பு அதிகாரியிடம், தனது கணவர் இறந்ததால் தனக்கு பணப்பலன் மற்றும் தனது மகள் வைஷ்ணவிக்கு வாரிசு அடிப்படையில் வேலை வழங்க வேண்டும் என விண்ணப்பித்தார்.
2-வது திருமணம்
அப்போது ரெயில்வே அதிகாரி அவரிடம், ஏற்கனவே அரியமங்கலம் காமராஜ் நகரை சேர்ந்த அமுதா என்பவர் தனது கணவர் ராதாகிருஷ்ணன் இறந்து விட்டதால் தனக்கு பணப்பலன் மற்றும் தனது மகன் சதீஷ்குமாருக்கு வாரிசு அடிப்படையில் வேலை கேட்டு விண்ணப்பித்துள்ளதாக தெரிவித்தார்.
கடந்த 1991-ம் ஆண்டு ராதாகிருஷ்ணனை அமுதா 2-வது திருமணம் செய்து கொண்டதாகவும், அவர்களுக்கு சதீஷ்குமார் என்ற மகன் பிறந்ததாகவும், அதற்கான பிறப்பு சான்று, ரேஷன்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை சமர்ப்பித்து இருந்ததும் தெரியவந்தது.
போலி ஆவணம்
இதனால் அதிர்ச்சி அடைந்த ராதாகிருஷ்ணனின் மனைவி வரலெட்சுமி திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கோசலைராமன் விசாரணை நடத்தினார்.
விசாரணையில், அமுதாவுக்கு பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வி.களத்தூரை சேர்ந்த கணேசன் என்பவருடன் திருமணம் நடந்துள்ளதும், அவர்களுக்கு பிறந்த 3-வது மகன் தான் சதீஷ்குமார் என்பதும், கணேசனின் சொத்துக்கள் சதீஷ்குமார் பெயருக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதும் தெரியவந்தது. மேலும் அமுதா ரெயில்வே அதிகாரியிடம் சமர்பித்த ஆவணங்கள் போலியானது என்றும் விசாரணையில் தெரியவந்தது.
தாய்-மகன் மீது வழக்கு
இதையடுத்து போலீசார் அமுதா, அவரது மகன் சதீஷ்குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story