மொபட் மீது கார் மோதி தொழிலாளி பலி; உறவினர்கள் சாலை மறியல்
மொபட் மீது கார் மோதி தொழிலாளி இறந்ததை தொடர்ந்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
உடையார்பாளையம்:
தம்பதி
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தை அடுத்த ஏந்தல் மெயின்ரோட்டு தெருவைச் சேர்ந்தவர் முத்து என்ற சின்னகுஞ்சு(வயது 55). கூலித்தொழிலாளி. இவரது மனைவி சரோஜா(48). இவர்கள் மொபட்டில் உடையார்பாளையத்தில் உள்ள தங்களது மகள் வீட்டிற்கு சென்றுவிட்டு மீண்டும் ஏந்தல் கிராமத்திற்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையை கடந்தபோது திருச்சி சாலைப்பகுதியில் இருந்து வந்த கார், முத்து ஓட்டி வந்த மொபட் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் முத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த அவரது மனைவி சரோஜா உயிருக்கு ஆபத்தான நிலையில் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
சாலை மறியல்
இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த அவர்களது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் உடையார்பாளையம் இடையார் பிரிவு சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அடிக்கடி விபத்து ஏற்படும் இந்த இடத்தில் மேம்பாலம் அல்லது ரவுண்டானா அமைக்க வேண்டும். இந்த சாலை அருகே உள்ள 2 டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும். இந்த சாலையில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்க வேண்டும். உயிரிழந்த முத்துவின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறி தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இது பற்றி தகவல் அறிந்து வந்த உடையார்பாளையம் போலீசார் மற்றும் ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு (பொறுப்பு) ராஜன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அவர்கள் கோரிக்கை தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் உறுதி அளித்ததன்பேரில் பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
போக்குவரத்து பாதிப்பு
மறியலால் திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மொபட் மீது மோதிய கார் டிரைவர் தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். இறந்த முத்துவுக்கு ரேவதி, சசிகலா, கவுரி ஆகிய மகள்களும், மணிகண்டன் என்ற மகனும் உள்ளனர்.
Related Tags :
Next Story