அரசு கல்லூரிகளில் தற்காலிக விரிவுரையாளர்கள்- அலுவலர்கள் உண்ணாவிரத போராட்டம்
அரசு கல்லூரிகளில் தற்காலிக விரிவுரையாளர்கள்- அலுவலர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
பெரம்பலூர்:
5 மாத ஊதியம்
பெரம்பலூா் மாவட்டம் குரும்பலூரில் இயங்கி வந்த பெரம்பலூர் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கடந்த 2019-ம் ஆண்டு முதல் அரசு கல்லூரியாக மாற்றப்பட்டது. இந்த கல்லூரியில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் தற்காலிகமாக பணிபுரியும் கவுரவ, மணிநேர, பெற்றோர் ஆசிரியர் கழக விரிவுரையாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு கடந்த 5 மாதங்களாக பல்கலைக்கழகம் ஊதியம் வழங்கவில்லை.
மேலும் ஊதியம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டும், பல்கலைக்கழகம் இன்னும் ஊதியம் வழங்காமல் இழுத்தடிப்பதாக கூறப்படுகிறது. இதனால் பெரம்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணிபுரியும் தற்காலிக விரிவுரையாளர்கள் மற்றும் அலுவலர்கள் வருமானமின்றி குடும்பம் நடத்த முடியாமல் தவித்து வருகின்றனர்.
உண்ணாவிரத போராட்டம்
இதையடுத்து ஊதியம் வழங்கக்கோரி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்ட கல்லூரியின் தற்காலிக விரிவுரையாளர்கள், அலுவலர்கள் நேற்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரி வளாகத்தில் நடந்த இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு தமிழ்நாடு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார்.
இதில் கல்லூரியில் தற்காலி கமாக பணிபுரியும் விரிவுரையாளர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர். அப்போது கடந்த 5 மாத ஊதியத்தை உடனடியாக திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் வழங்ககோரி பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.
இன்று முதல் உள்ளிருப்பு போராட்டம்
காலை 9 மணிக்கு தொடங்கிய உண்ணாவிரத போராட்டம் மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. உண்ணாவிரத போராட்டத்தில் சிலர் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். தற்காலிக விரிவுரையாளர்கள், அலுவலர்களின் இந்த போராட்டத்தினால் கல்லூரியில் சில வகுப்புகளுக்கு பாடங்கள் எடுக்கும் பணியும், சில அலுவலக பணியும் பாதிக்கப்பட்டது. மேலும் கோரிக்கையை வலியுறுத்தி இன்று (வியாழக்கிழமை) முதல் கல்லூரியில் தற்காலிக விரிவுரையாளர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் பணியை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
வாக்குவாதம்
இதேபோல் குன்னம் அருகே உள்ள வேப்பூர் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் நடந்த போராட்டத்தில் பங்கேற்க விரிவுரையாளர்கள் மற்றும் ஊழியர்கள் தங்கள் குடும்பத்தினருடன் வந்திருந்தனர். ஆனால் விரிவுரையாளர்கள், ஊழியர்களை மட்டுமே குன்னம் போலீசார் கல்லூரி வளாகத்திற்கு உள்ளே ெசல்ல அனுமதித்தனர். குடும்பத்தினரை உள்ளே விட போலீசார் மறுத்தனர். போராட்டம் நடந்த மற்ற கல்லூரிகளில் விரைவுரையாளர்கள் மற்றும் ஊழியர்களின் குடும்பத்தினரை உள்ளே அனுமதித்த நிலையில், வேப்பூர் கல்லூரியில் அவர்களை உள்ளே விட மறுத்ததால் குடும்பத்தினர் வெயிலில் சாலையிலேயே இருந்தனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
மேலும் கல்லூரி வளாகத்திற்கு உள்ளே விட மறுத்ததால் கல்லூரி முதல்வரை கண்டித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் உண்ணாவிரத போராட்டம் மாலை 3 மணி வரை நடைபெற்றது. இதையடுத்து விரிவுரையாளர்கள் மற்றும் ஊழியர்கள் கலைந்து சென்றனர். மேலும் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் இன்று முதல் உள்ளிருப்பு போராட்டம் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story