சிவன் கோவில்களில் அன்னாபிஷேக விழா
சிவன் கோவில்களில் அன்னாபிஷேக விழா நடைபெற்றது.
பெரம்பலூர்:
1,008 கிலோ அரிசி சாதம்
ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் நேற்று அன்னாபிஷேக விழா நடைபெற்றது. இதில் வேப்பந்தட்டை தாலுகா, வாலிகண்டபுரத்தில் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற வாலாம்பிகை சமேத வாலீஸ்வரர் கோவிலில் நேற்று அன்னாபிஷேக விழா நடந்தது.
இதையொட்டி நேற்று மாலை 4.30 மணிக்கு செல்லப்பா சிவாச்சாரியார் தலைமையில் நடந்த பூஜையில் 1,008 கிலோ அரிசியை சாதமாக சமைத்து மூலவர் வாலீஸ்வரருக்கு சாற்றப்பட்டது. பின்னர் மூலவருக்கு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பயபக்தியுடன் தரிசனம் செய்தனர். பின்னர் அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அகிலாண்டேஸ்வரி மற்றும் ஊழியர்கள், பணியாளர்கள் செய்திருந்தனர்.
அன்னாபிஷேகம்
இதேபோல் பெரம்பலூர் அகிலாண்டேசுவரி சமேத பிரம்மபுரீஸ்வர் கோவில், துறைமங்கலத்தில் உள்ள மீனாட்சி சமேத சொக்கநாதர் கோவில், பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் பிரம்மரிஷி மலை அடிவாரத்தில் உள்ள காகன்னை ஈஸ்வரர் கோவில், குரும்பலூரில் உள்ள பஞ்சநந்தீஸ்வரர் உடனுறை தர்மசம்வர்த்தினி கோவில், செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் கோவில், வெங்கனூர் விருத்தாச்சலேஸ்வரர் கோவில், சு.ஆடுதுறையில் உள்ள குற்றம் பொறுத்த ஈஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்களில் ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி நேற்று நடந்த அன்னாபிஷேக விழாவில் மூலவருக்கு அரிசி சாதம் சாற்றப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story