சேலம் மாவட்டத்தில் பலத்த மழை
சேலம் மாவட்டத்தில் பலத்த மழை
சேலம், அக்.21-
சேலம் மாவட்டத்தில் நேற்று பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. தாரமங்கலம் அருகே மின்னல் தாக்கி மாடு செத்தது.
தாரமங்கலம்
சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இடி மின்னலுடன் பலத்த மழை கொட்டி தீர்த்தது. தாரமங்கலம் பகுதியில் நேற்று மாலையில் பெய்த கனமழையால் சங்ககிரி செல்லும் சாலையின் ஓரத்தில் இருந்த புளிய மரம் ஒன்று வேரோடு சாய்ந்தது. அந்த மரம் அருகில் இருந்த ஓட்டு வீட்டின் மீது விழுந்து வீடு சேதமடைந்தது.
அந்த வீட்டில் குடியிருந்த மூதாட்டி சின்னப்பொண்ணு (வயது 70) அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினார். சம்பவ இடத்திற்கு வந்த பேரூராட்சி அதிகாரிகள் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.
மின்னல் தாக்கி மாடு செத்தது
தாரமங்கலம் அருகே உள்ள குறுக்குப்பட்டி பவளத்தானூர் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல் (50), விவசாயி. நேற்று மாலை தாரமங்கலம் பகுதியில் இடி மின்னலுடன் மழைபெய்த போது, இவர் வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த எருமை மின்னல் தாக்கி செத்தது.
இதுபற்றி கால்நடை டாக்டர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் நேரில் வந்து இறந்த மாட்டை பார்த்தனர். பின்னர் இதுதொடர்பாக அவர்கள் வருவாய்த்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தேவூர்
இதேபோல் தேவூர் பகுதியில் நேற்று அதிகாலை இடி மின்னலுடன் கன மழை பெய்தது. விவசாயிகள் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ள வயல்களில் தண்ணீர் நிரம்பி வழிந்து வயல் வரப்புகளை உடைத்து சென்றது. மேலும் மின்னல் தாக்கியதில் தென்னை மரங்கள் சேதமடைந்தன. மேலும் காலை முதல் மாலை வரை வானம் மேகமூட்டத்துடன் குளிர்ந்த காற்று வீசியது. இரவில் கனமழை பெய்தது.
ஏற்காடு
ஏற்காட்டில் நேற்று காலை 4 மணி முதல் சாரல் மழை பெய்தது. சுமார் 3 மணி நேரம் நீடித்த இந்த மழையால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதித்தது. இதை தொடர்ந்து வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. மதியம் சுமார் 2 மணி அளவில் மீண்டும் தொடங்கிய மழை மாலை 4 மணி வரை பலத்த மழை பெய்தது. தொடர்ந்து மாலை 6 மணி முதல் இடியுடன் கூடிய மழை பெய்ய தொடங்கியது. இந்த பலத்த மழையின் காரணமாக பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதித்தது.
கட்டிட வேலைகள் மற்றும் எஸ்டேட் வேலைகள் அனைத்தும் முடங்கின. வேலை முடித்து வீடு செல்ல முடியாமல் கூலியாட்கள் தவித்தனர். சாலைகளில் மழைநீர் கரைபுரண்டு ஓடியது. வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் அவதிப்பட்டனர்.
Related Tags :
Next Story