9 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணி இடமாற்றம்; கர்நாடக அரசு உத்தரவு


9 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணி இடமாற்றம்; கர்நாடக அரசு உத்தரவு
x
தினத்தந்தி 21 Oct 2021 2:41 AM IST (Updated: 21 Oct 2021 2:41 AM IST)
t-max-icont-min-icon

கோலார் தங்கவயல் போலீஸ் சூப்பிரண்டு இலக்கியா கருணாகரன் உள்பட 9 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணி இடமாற்றம் செய்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு: கோலார் தங்கவயல் போலீஸ் சூப்பிரண்டு இலக்கியா கருணாகரன் உள்பட 9 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணி இடமாற்றம் செய்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

இலக்கியா கருணாகரன்

கர்நாடகத்தில் ஐ.பி.எஸ். அதிகாரிகள் 9 பேர் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, கோலார் தங்கவயல் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த இலக்கியா கருணாகரனை அதிரடியாக பணி இடமாற்றம் செய்து பெங்களூரு தனிச்சந்திராவில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளியின் முதல்வராக நியமித்து கர்நாடக அரசு நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுபோல், பெங்களூரு தடய அறிவியல் ஆய்வகத்தில் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த வினாயக் வசந்த்ராவ், பெங்களூரு வடக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். வடக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனராக இருந்த தர்மேந்திரகுமார் மீனா பணி இடமாற்றம் செய்யப்பட்டு, தடய அறிவியல் ஆய்வகத்தில் போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மண்டியா போலீஸ் சூப்பிரண்டு

இதுபோல், ராய்ச்சூர் போலீஸ் சூப்பிரண்டாக இருந்த நிகாம் பிரகாஷ் அம்ரித் பணி இடமாற்றம் செய்யப்பட்டு, உடுப்பி மாவட்ட நக்சல் ஒழிப்பு படை போலீஸ் சூப்பிரண்டாகவும், பெங்களூரு போலீஸ் தலைமை அலுவலகத்தில் பணியாற்றிய ஐ.பி.எஸ். அதிகாரி சவிதா பணி இடமாற்றம் செய்யப்பட்டு, பெங்களூரு போக்குவரத்து வடக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மண்டியா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இருந்த டாக்டர் அஸ்வினி இடமாற்றம் செய்யப்பட்டு, பெங்களூரு போலீஸ் தலைமை அலுவலகத்திற்கு மாற்றப்பட்டு இருக்கிறார்.

மைசூருவில், போலீஸ் அகாடமியின் துணை இயக்குனராக இருந்த சுமன் டி.பனிகர் இடமாற்றம் செய்யப்பட்டு, மண்டியா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார். உடுப்பியில் நக்சல் ஒழிப்பு படையின் போலீஸ் சூப்பிரண்டாக இருந்த நிகில் இடமாற்றம் செய்யப்பட்டு, ராய்ச்சூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாகவும், சித்ரதுர்கா கிரியூர் உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய தீபன், கலபுரகி நகர உதவி போலீஸ் கமிஷனராகவும் நியமித்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

பரபரப்பு

கோலார் தங்கவயல் போலீஸ் மாவட்டம், கோலார் மாவட்டத்தில் இயங்கி வந்தது. அதாவது ஆங்கிலேயர் காலத்தில் தங்கச்சுரங்கம் அமைக்கப்பட்டபோது கோலார் தங்கவயலுக்கு தனி போலீஸ் அந்தஸ்து வழங்கப்பட்டு அது போலீஸ் மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகும் கோலார் தங்கவயல் போலீஸ் மாவட்டம் செயல்பட்டு வந்தது. 

தற்போது அந்த போலீஸ் மாவட்டத்தை கர்நாடக அரசு ரத்து செய்கிறது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும், கோலார் தங்கவயல் போலீஸ் சூப்பிரண்டு இலக்கியா கருணாகரன் திடீரென பணி இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக அங்கு யாரும் நியமிக்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் கோலார் தங்கவயலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story