சிறைக்குள் போலீஸ்காரர்கள் செல்போன் எடுத்து செல்ல தடை


சிறைக்குள் போலீஸ்காரர்கள் செல்போன் எடுத்து செல்ல தடை
x
தினத்தந்தி 21 Oct 2021 2:41 AM IST (Updated: 21 Oct 2021 2:41 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறைக்குள் கைதிகள் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவதை தடுக்கும் விதமாக போலீஸ்காரர்கள் செல்போன்கள் எடுத்து செல்ல தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

பெங்களூரு: பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறைக்குள் கைதிகள் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவதை தடுக்கும் விதமாக போலீஸ்காரர்கள் செல்போன்கள் எடுத்து செல்ல தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

கஞ்சா பயன்படுத்தும் கைதிகள்

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்குள் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 4,500-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அடைக்கப்பட்டுள்ள கைதிகள் சட்டவிரோதமாக செல்போன் பயன்படுத்துவது, சிகரெட், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் பயன்படுத்துவது வாடிக்கையாக நடந்து வருகிறது. 

மேலும் சட்டவிரோத செயல்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை சிறைத்துறை உயர் போலீஸ் அதிகாரிகள் எடுத்து வருகின்றனர். கைதிகளை பார்க்க வரும் உறவினர்களுக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

செல்போன்களுக்கு தடை

அதே நேரத்தில் கைதிகளிடம் பணத்தை பெற்று அவர்களுக்கு தேவையான செல்போன் மற்றும் போதைப் பொருட்களை போலீஸ்காரர்கள் வழங்குவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்த நிலையில் பரப்பன அக்ரஹாரா சிறையில் பணியாற்றும் சாதாரண போலீஸ்காரர்கள், வார்டன்கள் செல்போன்கள், மணிபர்ஸ் உள்ளிட்ட பொருள்களை எடுத்துச் செல்வதற்கு உயர் போலீஸ் அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். 

பணிக்கு வரும் போலீஸ்காரர்கள் 3 முறை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளனர். அத்துடன் 3 இடங்களில் போலீஸ்காரர்கள் மற்றும் பிற ஊழியர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது தொடர்பான அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டுப்பாடுகள் சிறையில் பணியாற்றும் முக்கிய போலீஸ் அதிகாரிகளுக்கு பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதை தடுக்கும் விதமாக இந்த அதிரடி நடவடிக்கையை சிறைத்துறை அதிகாரிகள் எடுத்துள்ளனர்.

Next Story