மாணவர்களின் கற்றல் இடைவெளியை குறைக்க புதிய திட்டம்; கலெக்டர் விசாகன் தகவல்


மாணவர்களின் கற்றல் இடைவெளியை குறைக்க புதிய திட்டம்; கலெக்டர் விசாகன் தகவல்
x
தினத்தந்தி 21 Oct 2021 11:32 AM IST (Updated: 21 Oct 2021 11:32 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாணவர்களின் கற்றல் இடைவெளியை குறைக்க புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக கலெக்டர் விசாகன் தெரிவித்தார்.

திண்டுக்கல்:
திண்டுக்கல் மாணவர்களின் கற்றல் இடைவெளியை குறைக்க புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக கலெக்டர் விசாகன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது:-
இல்லம் தேடி கல்வி திட்டம்
கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு இடையே கற்றல் இடைவெளி ஏற்பட்டுள்ளது. இதனை குறைக்கும் வகையில் ‘இல்லம் தேடி கல்வி’ என்ற புதிய திட்டத்தை அரசு செயல்படுத்த உள்ளது. மாநில அரசின் 100 சதவீத நிதி பங்களிப்புடன் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் பள்ளி நேரத்தை தவிர மற்ற நேரத்தில் மாணவர்களின் கற்றல் திறனை அதிகரிக்கும் வகையில் அவர்களின் வீடு அருகில் சிறிய குழுக்கள் மூலம் தன்னார்வலர்கள் உதவியுடன் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்க முடியும். இந்த திட்டத்தை முழுமையாக செயல்படுத்தினால் மட்டுமே மாணவர்கள் தேர்வில் தேர்ச்சி பெற்று அடுத்த வகுப்புகளுக்கு செல்லும் போது முழு தகுதி படைத்தவர்களாக இருப்பார்கள்.
முன்னோட்ட அடிப்படையில்...
மாணவர்களுக்கு மிகுந்த பலனை கொடுக்கும் இந்த திட்டம் திண்டுக்கல், மதுரை, திருச்சி உள்பட 12 மாவட்டங்களில் முன்னோட்ட அடிப்படையில் 2 வாரங்களுக்கு செயல்படுத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்களின் கற்றல் திறன் அதிகரிக்கும். அவ்வாறு அதிகரிக்கும் பட்சத்தில் பிற மாவட்டங்களுக்கும் இந்த திட்டம் விரிவு படுத்தப்படும். இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் வகையில் மாநிலம், ஒன்றியம், மாவட்ட அளவில் செயல்பாட்டு குழுக்கள் விரைவில் உருவாக்கப்பட உள்ளன. இந்த திட்டம் குறித்த விழிப்புணர்வை மாணவர்கள், பெற்றோர்களுக்கு ஏற்படுத்தும் வகையில் கலை நிகழ்ச்சிகள், விழிப்புணர்வு முகாம்கள் ஆகியவை விரைவில் நடத்தப்பட உள்ளன.
இந்த திட்டத்தின் கீழ் தன்னார்வலர்களாக பணியாற்ற விருப்பம் உள்ளவர்கள் illamthedikalvi.tnschools.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த திட்டத்துக்கான ‘லோகோ’ உருவாக்கும் போட்டி நடத்தப்பட உள்ளது. இதில் தனிநபராகவோ, குழுவாகவோ கலந்துகொள்ளலாம். போட்டியாளர்கள் தங்களின் இறுதி படைப்பினை illamthedikalvi@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கு வருகிற 24-ந்தேதி மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். சிறந்த படைப்புக்கு ரூ.25 ஆயிரம் பரிசு வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story