தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 21 Oct 2021 7:07 PM IST (Updated: 21 Oct 2021 7:07 PM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

புகாருக்கு உடனடி தீர்வு;
தெரு விளக்குகள் சீரமைப்பு 

தென்காசி மாவட்டம் கடையம் பகுதியைச் சேர்ந்தவர் திருக்குமரன். இவர் கீழக்கடையம் பஞ்சாயத்து பிள்ளையார் கோவில் தெருவில் கடந்த ஒரு மாதமாக தெருவிளக்குகள் எரியவில்லை என்று ‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு அனுப்பிய பதிவு நேற்று முன்தினம் செய்தியாக வெளியானது. இதன் எதிரொலியாக பஞ்சாயத்து நிர்வாகத்தினர் மின் ஊழியர்கள் மூலம் தெருவிளக்குகளை எரிய வைத்துள்ளனர். தற்போது மின்விளக்குகள் ஒளிர்கின்றன. எனவே, கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த ‘தினத்தந்தி’க்கும், மின்விளக்குகளை சீரமைத்த ஊழியர்களுக்கும் அவர் தனது நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துள்ளார்.

சாலையில் தேங்கும் கழிவுநீர்

நெல்லை பேட்டை ரகுமானியா பள்ளிவாசல் சன்னதி தெரு கிழக்குபுறம் உள்ள கழிவுநீர் ஓடையில் அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் தேங்குகிறது. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும், பொதுமக்கள் அதில் நடந்து செல்லும் அவலம் ஏற்படுகிறது. இதுதொடர்பாக மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
முகம்மது முகைதீன், பேட்டை.

புகார் பெட்டி செய்தி எதிரொலி

நாங்குநேரி தாலுகா நெடுங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் வேலாயுதம். இவர் ஊரில் உள்ள குளத்து மடை ஷட்டர் உடைந்து கீழே விழுந்து கிடப்பதால் குளத்து தண்ணீர் பாசனத்திற்கு பயன்படாமல் வீணாக வெளியேறுகிறது என்று ‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு அனுப்பிய பதிவு செய்தியாக வெளியானது. இதன் எதிரொலியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மடை ஷட்டரை சரிசெய்துள்ளனர். இதற்கு உறுதுணையாக இருந்த ‘தினத்தந்தி’க்கும், அதிகாரிகளுக்கும் அவர் தனது நன்றியையும், பாராட்டையும் தெரிவித்து உள்ளார்.

சாலையில் மீண்டும் இரும்பு தடுப்பு வைக்க வேண்டும்

தென்காசியில் இருந்து அம்பை செல்லும் நெடுஞ்சாலையில் மத்தளம்பாறை அருகே குற்றாலம் விலக்கு உள்ளது. இங்கு விபத்துகளை தடுப்பதற்காக இரும்பு தடுப்புகள் (பேரிகார்டு) வைக்கப்பட்டு இருந்தன. கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு அந்த இரும்பு தடுப்புகளை அதிகாரிகள் அகற்றிவிட்டனர். இதனால் தற்போது அந்த பகுதியில் வாகனங்கள் வேகமாக செல்வதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நலன் கருதி அங்கு மீண்டும் இரும்பு தடுப்புகள் வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
அம்ஜத், முதலியார்பட்டி.

அணைக்கு செல்லும் சாலை சீரமைக்கப்படுமா? 

செங்கோட்டை தாலுகா மேக்கரை அடவிநயினார் அணை தென்காசி மாவட்டத்தில் பெரிய அணையாகும். 132 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையை தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்த்து செல்கிறார்கள். தற்போது, மேக்கரை விலக்கில் இருந்து அடவிநயினார் அணைக்கு செல்லும் சாலை சுமார் 2 கிலோ மீட்டருக்கு குண்டும் குழியுமாக மோசமாக காணப்படுகிறது. இதனால் வாகனங்களில் செல்லும் சுற்றுலா பயணிகள் அவதிப்படுகிறார்கள். தற்போது மழை பெய்து உள்ளதால் சாலையில் மழைநீரும் தேங்கி கிடக்கிறது. ஆகவே, சேதமடைந்த சாலையை நெடுஞ்சாலைத்துறையினர் சீரமைக்க வேண்டுகிறேன்.
ராஜீவ்காந்தி, செங்கோட்டை.

ஆபத்தான மின்கம்பம்

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் வடக்கூடர்- உவச்சர்வழி சாலையில் உள்ள மின்கம்பம் உடைந்த நிலையில் ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. இதில் உள்ள மின்விளக்குகளும் எரிவதில்லை. மேலும் இந்த சாலை வழியாக தான் வீரகாளியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல வேண்டி உள்ளது. ஆகவே, இந்த மின்கம்பத்தை மாற்றி, மின்விளக்கு எரியவைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  
ஜேம்சன், வடக்கூர். 

புதிய ரேஷன் கடை அமைக்கப்படுமா?

ஓட்டப்பிடாரம் அருகே முள்ளூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட அய்யர்பட்டி கிராமத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகள் உள்ளன. இங்குள்ள பொதுமக்கள் ரேஷன் பொருட்கள் வாங்குவதற்காக ஒரு கிேலா மீட்டர் தொலைவில் உள்ள முள்ளூர் கிராமத்திற்கு செல்ல வேண்டி உள்ளது. இதனால் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள். எனவே, அய்யர்பட்டி கிராமத்திற்கு புதிய ரேஷன் கடை அமைத்து கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
குபேந்திர பெருமாள், முள்ளூர்.

Next Story