மின்கம்பங்கள் சாய்ந்ததால் கிராமங்கள் இருளில் மூழ்கின
கோத்தகிரி, குன்னூரில் பலத்த மழை பெய்ததால் மின்னல் தாக்கி மூதாட்டி படுகாயம் அடைந்தார். மேலும் மின்கம்பங்கள் சாய்ந்ததால் கிராமங்கள் இருளில் மூழ்கின.
குன்னூர்
கோத்தகிரி, குன்னூரில் பலத்த மழை பெய்ததால் மின்னல் தாக்கி மூதாட்டி படுகாயம் அடைந்தார். மேலும் மின்கம்பங்கள் சாய்ந்ததால் கிராமங்கள் இருளில் மூழ்கின.
பலத்த மழை
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை முதல் நள்ளிரவு வரை பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. குறிப்பாக கோத்தகிரி, குன்னூர் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. ஊட்டியில் பெய்த மழையால் முக்கிய சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊட்டியின் சுற்றுப்புற பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
மூதாட்டி படுகாயம்
குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை 6.10 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல இடி, மின்னலுடன் பலத்த மழையாக கொட்டியது.
அப்போது இரவு 7.30 மணியளவில் குன்னூர் அருகே அருவங்காடு அட்டி பகுதியில் கண்ணம்மாள்(வயது 85) என்பவரது வீட்டின் மேற்கூரையை மின்னல் தாக்கியது. தொடர்ந்து மேற்கூரை சேதம் அடைந்து வீட்டில் இருந்த துணிகளில் தீப்பிடித்து எரிந்தது. இதில் சிக்கி கண்ணம்மாள் பலத்த காயம் அடைந்தார்.
தீவிர சிகிச்சை
இதை கண்ட அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து, தீயை அணைத்து கண்ணம்மாளை மீட்டு குன்னூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பிறகு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் 8.30 மணியளவில் சிறிது நேரம் மழை குறைந்தது. அதன்பிறகு 11 மணியளவில் மீண்டும் பலத்த மழை பெய்ய தொடங்கியது.
இதன் காரணமாக பல இடங்களில் மரங்கள் முறிந்து சாலையில் விழுந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் மரங்களை வெட்டி அகற்றி சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.
மின்கம்பங்கள் சாய்ந்தன
மழை காரணமாக குன்னூர் போலீஸ் குடியிருப்பு, வட்டப்பாறை, பித்தாவூர், ஜிம்கானா, எடப்பள்ளி ஆகிய இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. இதனால் சுற்றுவட்டார கிராமங்களில் விடிய விடிய மின்தடை ஏற்பட்டதால், இருளில் பொதுமக்கள் சிரமம் அடைந்தனர். இதை அறிந்த மின்வாரிய உதவி பொறியாளர் ஜான்சன் தலைமையிலான ஊழியர்கள் விரைந்து சென்று, மின்கம்பங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
குன்னூர் மாணிக்கம்பிள்ளை தோட்டம் பகுதியில் கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டது. இதனால் கழிவுநீருடன் மழைநீர் கலந்து வேகமாக வெளியேறியதால் கிரி என்பவரது வீட்டு சுவர் வலுவிழந்து இடிந்து விழுந்தது. அப்போது அதன் அருகில் யாரும் இல்லாததால், வீட்டில் இருந்த 5 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
மழை அளவு
நீலகிரியில் நேற்று காலை 8 மணியுடன் 24 மணி நேரத்தில் முடிவடைந்த மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:- ஊட்டி-18.2, நடுவட்டம்-15, குந்தா-43, அவலாஞ்சி-25, எமரால்டு-20, அப்பர்பவானி-25, பாலகொலா-56, குன்னூர்-55, பர்லியார்-36, கேத்தி-46, உலிக்கல்-50, எடப்பள்ளி-47, கோத்தகிரி-53, கோடநாடு-49, கூடலூர்-45, தேவாலா-30, ஓவேலி-42, பந்தலூர்-22 என மழை பதிவாகி உள்ளது.
Related Tags :
Next Story