நீலகிரியில் 180 இடங்களில் கலைக்குழு மூலம் விழிப்புணர்வு
இல்லம் தேடி கல்வி திட்டம் குறித்து நீலகிரியில் 180 இடங்களில் கலைக்குழு மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நாசரூதின் தெரிவித்தார்.
ஊட்டி
இல்லம் தேடி கல்வி திட்டம் குறித்து நீலகிரியில் 180 இடங்களில் கலைக்குழு மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நாசரூதின் தெரிவித்தார்.
மாவட்ட குழு கூட்டம்
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட காலங்களில் அரசு பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் கற்றல் இடைவெளி, இழப்புகளை குறைத்திடும் வகையில் இல்லம் தேடி கல்வி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. நீலகிரியில் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் மாவட்ட குழு கூட்டம், ஊட்டி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
இதற்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கினார். அப்போது திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தவும், மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் கலெக்டர் அறிவுரைகள் வழங்கினார்.
கல்வி தகுதி
இத்திட்டத்தின் கீழ் சிறப்பு பயிற்சி அளிக்க ஒவ்வொரு குடியிருப்புக்கும் 2 தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை கற்பிக்கும் தன்னார்வலர்களுக்கு குறைந்தபட்ச கல்வி தகுதியாக பிளஸ்-2 வகுப்பும், 6 முதல் 8 வகுப்பு வரை கற்பிக்கும் தன்னார்வலர்களுக்கு பட்டப்படிப்பும் கல்வித்தகுதியாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. தேர்வு செய்யப்படும் தன்னார்வலர்களுக்கு இதற்கான பயிற்சிகளும் குறிப்பிட்ட இடைவெளியில் நடத்தப்படுகிறது.
இல்லம் தேடி கல்வி திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தன்னார்வலர்கள் பதிவினை ஊக்கப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நீலகிரியில் 3 கலைக்குழுவினர் மூலம் தெரு நாடகங்கள், பொம்மலாட்டம், நடனம் மற்றும் பாடல்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
விழிப்புணர்வு
ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நாசரூதின் தொடங்கி வைத்தார். இதுகுறித்து அவர் கூறும்போது, நீலகிரியில் 180 இடங்களில் 3 கலைக்குழுவினர் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
திட்டம் சிறப்பாக செயல்பட மாநில அளவிலான குழு, மாவட்ட அளவிலான குழு, ஒன்றிய அளவிலான குழு, பள்ளி மேலாண்மை குழு என 4 அடுக்கு குழுக்கள் உருவாக்கப்பட்டு உள்ளது. 6 மாத காலத்திற்கு தினமும் மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் சேர தன்னார்வலர்கள் http:/illamthedikalvi.tn.schools.gov.in/ என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம் என்றார்.
Related Tags :
Next Story