மாணவர்கள் திட்டியதால் நடுரோட்டில் அரசு பஸ்சை நிறுத்திய டிரைவர் போக்குவரத்து பாதிப்பு


மாணவர்கள் திட்டியதால் நடுரோட்டில் அரசு பஸ்சை நிறுத்திய டிரைவர்  போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 21 Oct 2021 9:10 PM IST (Updated: 21 Oct 2021 9:10 PM IST)
t-max-icont-min-icon

மாணவர்கள் திட்டியதால் நடுரோட்டில் அரசு பஸ்சை டிரைவர் நிறுத்தினார். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


கன்னிவாடி:
ஒட்டன்சத்திரத்தில் இருந்து செம்பட்டி நோக்கி நேற்று மாலை அரசு டவுன் பஸ் ஒன்று சென்றது. அந்த பஸ், கன்னிவாடி வேப்பமரத்து பஸ் நிறுத்தம் அருகே வந்தது. அந்த பஸ்சில் பயணிகளுடன் பள்ளிக்கூட மாணவ-மாணவிகளும் பயணம் செய்தனர். இதில் சில மாணவர்கள், படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்ததாக கூறப்படுகிறது. அந்த மாணவர்களை இருக்கையில் அமருமாறு டிரைவர் அறிவுறுத்தினார். இதனால் ஆத்திரம் அடைந்த சில மாணவர்கள், டிரைவரை திட்டியதாக தெரிகிறது. 
இதனையடுத்து டிரைவர், திடீரென நடுரோட்டில் பஸ்சை நிறுத்தி விட்டார். இதன் காரணமாக சாலையின் இருபுறத்திலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதுகுறித்து தகவல் அறிந்த கன்னிவாடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் அரசு பஸ் டிரைவர், கண்டக்டருடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானப்படுத்தினர். மேலும் அந்த மாணவர்களை கண்டிப்பதாகவும் போலீசார் உறுதி அளித்தனர். அதன்பிறகே மீண்டும் செம்பட்டி நோக்கி டிரைவர் பஸ்சை  இயக்கினார். இந்த சம்பவத்தினால் செம்பட்டி-ஒட்டன்சத்திரம் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.



Next Story