வீர, தீர செயல்களின்போது உயிரிழந்த போலீசாருக்கு கடலூரில், 63 துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சலி


வீர, தீர செயல்களின்போது உயிரிழந்த போலீசாருக்கு கடலூரில், 63 துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சலி
x
தினத்தந்தி 21 Oct 2021 9:48 PM IST (Updated: 21 Oct 2021 9:48 PM IST)
t-max-icont-min-icon

வீர, தீர செயல்களின்போது உயிரிழந்த போலீசாருக்கு கடலூரில், 63 துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தப்பட்டது.

கடலூர், 

வீரவணக்க நாள்

நாடு முழுவதும் காவல்துறை பணியில் வீர, தீர செயல்களின்போது உயிரிழந்த போலீசாருக்கு வீரவணக்க அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 21-ந்தேதி கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் கடலூர் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள ராணுவ நினைவு தூண் முன்பு நேற்று காலை வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது.
இதில் கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம், போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் ஆகியோர் கலந்துகொண்டு பணியின்போது வீரமரணம் அடைந்த 377 போலீசாரின் நினைவு தூணிற்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்ச்சியின்போது பணிக்காலத்தில் வீரமரணம் அடைந்த போலீசார் மற்றும் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்த காவல்துறையினருக்கு ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் முத்துகுமரன் தலைமையில் 63 குண்டுகள் முழங்க வீரவணக்க அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் நாடு முழுவதும் வீரதீர செயல்களில் ஈடுபட்டும், நோய்த்தொற்று தடுப்பு பணியில் ஈடுபட்டும் உயிரிழந்த போலீசார் நினைவு கூரப்பட்டனர்.

உறுதிமொழி

பின்னர் போலீசார் கடற்கரையானாலும், பனிமலை சிகரமானாலும் காவலர் பணி இடர் நிறைந்தது. உனது வருங்காலத்திற்கு எனது தற்காலத்தை ஈந்தேன். நாளைய உன் விடியலுக்கு இன்று நான் மடிய தயார் என்று கூறி இந்தாண்டு இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் உயிரிழந்த 377 போலீசார் விட்டு சென்ற பணிகளை செய்து முடிப்போம் என்று உறுதி பூண்டு, அவர்களின் வீர தியாகம் வீண்போகாது என்று அனைத்து போலீசாரும் உறுதிமொழி ஏற்றனர்.
இதில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரி சங்கர், மத்திய சிறை ஜெயிலர் அப்துல் ரகுமான், மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் லோகநாதன், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் செந்தில்விநாயகம், இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர் அருணாச்சலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story