தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 21 Oct 2021 5:06 PM GMT (Updated: 21 Oct 2021 5:06 PM GMT)

தினத்தந்தி புகார் பெட்டியில் வெளிவந்துள்ள செய்திகள் வருமாறு:-

பயணிகள் நிழலகம் வேண்டும்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பொறையாறு ராஜீவ்புரத்தில் இருந்த பயணிகள் நிழலகம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இடிக்கப்பட்டது. ஆனால் இதுவரை புதிதாக பயணிகள் நிழலகம் கட்டித்தரவில்லை. இதனால் பொதுமக்கள் மழை மற்றும் வெயில் காலங்களில் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி புதிதாக பயணிகள் நிழலகம் அமைத்துத்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
                                                                                                                                  -பொதுமக்கள், ராஜீவ்புரம்.

பெயர் பலகையில் குழப்பம்
மயிலாடுதுறை மாவட்டம், ஆறுபாதி கிராமத்திற்கு முன்னதாக, விளநகர் நெடுஞ்சாலையில், ஆறுபாதி ஊரின் பெயர் பலகை நெடுஞ்சாலைத் துறைமூலம் அமைக்கப்பட்டுள்ளது. அதற்குப்பிறகு விளநகர் கிராமத்தின் பெயர் பலகை நிறுவியுள்ளனர். சற்று தொலைவில் மீண்டும் ஆறுபாதி ஊர் பெயர்ப்பலகை இரண்டாவதாக நிறுவியுள்ளனர். இந்த குழப்பத்தால் ஆறுபாதி பயணிகள் விளநகர் பஸ்நிறுத்தத்தில் இறங்கிவிடுகின்றனர்.. எனவே விளநகர், ஆறுபாதி இரு ஊர்களிலும், உரிய பெயர்ப்பலகைகளை அமைத்து மக்களின்  குழப்பத்தை அகற்றவேண்டும்.
                                                                                                               -ஆறுபாதிவிளநகர் கிராம வாசிகள்.


தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் தாலுகா மூவா்கோட்டை கிராமத்தில் உள்ள 5-வது வார்டில் பொரியாா் சிலை கிழக்கு புறம் சாலையின் வளைவு ஓரத்தில் கஜா புயலின் போது சேதமடைந்து மின்கம்பம் பாதி உடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. இந்த மின்கம்பத்தில் இருந்து செல்லும் மின்கம்பிகள் தாழ்வாக செல்கிறது. இதனால் இந்த சாலைவழியாக செல்லும் கனரக வாகனங்கள், மின்கம்பியில் உரசி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.இதுதொடர்பாக பல முறை புகார் தெரிவித்தும் வடுவூர் மின்கோட்டம் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.எனவே சேதமடைந்த மின்கம்பத்தை உடனடி மாற்றி, தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சீரமைக்க வேண்டும்.
                                                                                                                  -கிராம மக்கள், மூவர்கோட்டை. 


செயல்படாத வேளாண்மை அலுவலகம்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டம் பரவாக்கோட்டை கிராமத்தில் வேளாண்மை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகம் 10 ஆண்டுகளாக செயல்படாமல் பூட்டிக்கிடக்கிறது. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். இந்த அலுவலகத்ததை சமூக விரோதிகள் மது அருந்தும் இடமாக மாற்றி வருகிறார்கள். மேலும் மது அருந்திவிட்டு தகராறில் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வேளாண்மை அலுவலகம் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                                                                                                  - கிராம மக்கள். பரவாக்கோட்டை.

Next Story