வடகிழக்கு பருவமழை காலத்தை எதிர்கொள்ள அனைத்து துறையினரும் தயார் நிலையில் இருக்க வேண்டும்-ஆய்வு கூட்டத்தில் முதன்மை செயலாளர் அதுல்ஆனந்த் அறிவுறுத்தல்


வடகிழக்கு பருவமழை காலத்தை எதிர்கொள்ள அனைத்து துறையினரும் தயார் நிலையில் இருக்க வேண்டும்-ஆய்வு கூட்டத்தில் முதன்மை செயலாளர் அதுல்ஆனந்த் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 21 Oct 2021 5:48 PM GMT (Updated: 21 Oct 2021 5:48 PM GMT)

வடகிழக்கு பருவமழை காலத்தை எதிர்கொள்ள அனைத்து துறையினரும் தயார் நிலையில் இருக்கவேண்டும் என்று தர்மபுரியில் நடந்த ஆய்வு கூட்டத்தில் தமிழக அரசின் முதன்மை செயலர் அதுல்ஆனந்த் அறிவுறுத்தினார்.

தர்மபுரி:
வடகிழக்கு பருவமழை காலத்தை எதிர்கொள்ள அனைத்து துறையினரும் தயார் நிலையில் இருக்கவேண்டும் என்று தர்மபுரியில் நடந்த ஆய்வு கூட்டத்தில் தமிழக அரசின் முதன்மை செயலர் அதுல்ஆனந்த் அறிவுறுத்தினார்.
தயார் நிலையில்
வடகிழக்கு பருவமழையையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த அதிகாரிகள் ஆய்வுக்கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழக அரசின் முதன்மை செயலாளர் மற்றும் தொழிலாளர் நல ஆணையர் அதுல் ஆனந்த் தலைமை தாங்கினார். 
கலெக்டர் திவ்யதர்சினி, மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, உதவி கலெக்டர் சித்ராவிஜயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
கூட்டத்தில் முதன்மை செயலாளர் மற்றும் தொழிலாளர் நல ஆணையர் அதுல் ஆனந்த் பேசியதாவது:-
வடகிழக்கு பருவமழை காலத்தில் எதிர்பாராமல் ஏற்படும் புயல், மழை வெள்ள பாதிப்புகளை போர்க்கால அடிப்படையில் சரிசெய்யவும், இழப்புகளை தடுக்கவும், மழை காலத்தை எதிர்கொள்ளவும், ஒவ்வொரு துறையினரும் அவசர காலத்திட்டம் தயாரித்து அதன்படி செயல்பட தயார் நிலையில் இருக்க வேண்டும். வருவாய்த்துறை, உள்ளாட்சி துறை, பொதுப்பணித்துறை போன்ற துறைகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். தீயணைப்புத்துறையின் மூலமாக பேரிடர் கால பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
சிறப்பு கட்டுப்பாட்டு அறை
அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் உயிர் காக்கும் மருந்துகளை போதிய அளவில் இருப்பு வைத்திருக்க வேண்டும். பேரிடர் காலங்களில் தகவல்களை தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் சிறப்பு கட்டுப்பாட்டு அறைக்கு 1077 என்ற இலவச தொலைபேசி எண்ணிலும், 04342-231500,04342-231508,04342-230067,04342-231077 ஆகிய தொலைபேசி எண்கள் மூலமாகவும் பொதுமக்கள் உடனடியாக தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
வடகிழக்கு பருவ மழைக்காலத்திற்கு முன்னதாக பழுதான மின்கம்பங்கள், மின் கம்பிகள், சாய்ந்து விழும் நிலையில் உள்ள மின் சாதன பொருட்களை மின் வாரியம் மூலம் ஆய்வு செய்து, ஏற்பட்ட பழுதுகளை உடனடியாக சரி செய்ய வேண்டும். விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பவர்களுக்கு சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் பருவமழை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
தங்கும் முகாம்கள்
மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டால் அதை எதிர்கொள்ள பொதுப்பணித்துறை, நீர்வள துறை மற்றும் நெடுஞ்சாலை துறையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும். மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் பொதுமக்களை தங்க வைக்க தேவையான முகாம்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் உதவி கலெக்டர் (பயிற்சி) கவுரவ்குமார், மகளிர் திட்ட அலுவலர் பாபு, பொதுப்பணித்துறை நீர் வள ஆதார செயற்பொறியாளர் குமார், அரூர் உதவி கலெக்டர் முத்தையன், வேளாண்மை இணை இயக்குனர் வசந்தரேகா, மருத்துவ பணிகள் இணை இயக்குனர் மலர்விழி, ஊராட்சிகள் உதவி இயக்குனர் சீனிவாசசேகர், பேரூராட்சிகள் உதவி இயக்குனர் குருராவ், மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயக்குமார், நகராட்சி ஆணையர் சித்ரா சுகுமார், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் சவுண்டம்மாள், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் மாலினி, கால்நடை பராமரிப்புத்துறை துணை இயக்குனர் வேடியப்பன் உள்பட துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story