தர்மபுரியில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு
நாடு முழுவதும் பணியின் போது உயிரிழந்த போலீசாருக்கு தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் தலைமையில் 72 குண்டுகள் முழங்க வீர வணக்கம் செலுத்தப்பட்டது.
தர்மபுரி:
நாடு முழுவதும் பணியின் போது உயிரிழந்த போலீசாருக்கு தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் தலைமையில் 72 குண்டுகள் முழங்க வீர வணக்கம் செலுத்தப்பட்டது.
அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி
இந்தியா முழுவதும் நடைபெற்ற பல்வேறு சம்பவங்களில் பணியின் போது உயிரிழந்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசாரை நினைவுகூரும் வகையில் காவலர் வீரவணக்க நாள் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 21-ந் தேதி போலீஸ் துறை சார்பில் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்தாண்டு இந்தியா முழுவதும் நடைபெற்ற பல்வேறு சம்பவங்களில் பணியின் போது மொத்தம் 377 போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் தமிழ்நாடு போலீஸ் துறை சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் பணியின் போது உயிரிழந்த போலீசாருக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
அந்த வகையில் தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் பணியின் போது உயிரிழந்த போலீசாருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் தலைமை தாங்கி அந்த வளாகத்தில் உள்ள நினைவுத்தூணுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
அப்போது அவர் பேசுகையில், இந்தியா முழுவதும் இந்த ஆண்டு பல்வேறு பகுதிகளில் நம்மை விட்டு பிரிந்த போலீஸ் குடும்பத்தினர் விட்டுச்சென்ற பணிகளை செய்து முடிப்போம். அவர்களின் வீரத்தியாகம் வீண்போகாது என்று இந்த காவலர் வீரவணக்க நாளில் அனைவரும் உறுதிமொழி ஏற்போம் என்று கூறினார்.
72 குண்டுகள்
இதன் தொடர்ச்சியாக பணியின் போது உயிரிழந்த போலீஸ்காரர்களுக்கு 72 குண்டுகள் முழங்க வீரவணக்க அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் அண்ணாமலை, புஷ்பராஜ், குணசேகரன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் அண்ணாதுரை, சவுந்தரராஜன், ராஜா சோமசுந்தரம், பாஸ்கர், வேணுகோபால், விஜயராகவன், பார்த்திமா, தர்மபுரி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில், சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரம் மற்றும் போலீஸ் அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
Related Tags :
Next Story