வீடுகளில் பூட்டை உடைத்து திருடிய 2 பேர் கைது. 32 பவுன் நகைகள் பறிமுதல்


வீடுகளில் பூட்டை உடைத்து திருடிய 2 பேர் கைது. 32 பவுன் நகைகள் பறிமுதல்
x
தினத்தந்தி 21 Oct 2021 11:56 PM IST (Updated: 21 Oct 2021 11:56 PM IST)
t-max-icont-min-icon

வீடுகளில் பூட்டை உடைத்து திருடிய 2 பேர் கைது

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் வீடுகளில் பூட்டை உடைத்து திருட்டில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 32 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

நகை கொள்ளை

திருவண்ணாமலை அவலூர்பேட்டை சாலை எம்.ஆர்.டி. நகரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 37). இவர் கடந்த 18-ந் தேதி தனது குடும்பத்துடன் ராந்தம் கிராமத்தில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு அன்று மாலையில் வீடு திரும்பி உள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. 

இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் திருவண்ணாமலை கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் இச்சம்பவம் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் ரெட்டி உத்தரவின் பேரில் திருவண்ணாமலை உதவி போலீஸ் சூப்பிரண்டு கிரண்சுருதி தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் அரிகிருஷ்ணன், லட்சுமிபதி மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது. மேலும் கொள்ளை சம்பவம் நடந்த வீட்டில் கிடைத்த கைரேகையை ஒப்பிட்டு பார்த்ததில் இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் பழைய குற்றவாளிகள் என தெரியவந்தது. 

2 பேர் கைது

தொடர்ந்து நேற்று முன்தினம் மாலையில் தனிப்படையினர் திருவண்ணாமலையில் உள்ள எடப்பாளையம் சந்திப்பு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் மொபட்டில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை வக்கண்ம்பட்டி கிராமத்தை சேர்ந்த வேலு (38) மற்றும் ராணிப்பேட்டை மாவட்டம் தெங்கால் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த ஜெயக்குமார் (39) என்பது தெரியவந்தது. 

மேலும் அவர்கள் கிருஷ்ணகுமார் வீட்டிலும், மங்கலம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட தெள்ளானந்தல் கிராமத்திலும் வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை திருடியவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 32 பவுன் நகைகள் மற்றும் ஒரு மொபட் பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story