குடும்ப தகராறில் மனைவி குத்திக்கொலை


குடும்ப தகராறில் மனைவி குத்திக்கொலை
x
தினத்தந்தி 22 Oct 2021 12:36 AM IST (Updated: 22 Oct 2021 12:36 AM IST)
t-max-icont-min-icon

சிவகாசி அருகே குடும்ப தகராறில் மனைவியை கத்தியால் குத்தி கொன்றவரை போலீசார் கைது செய்தனர்.

ஆலங்குளம்
சிவகாசி அருகே குடும்ப தகராறில் மனைவியை கத்தியால் குத்தி கொன்றவரை போலீசார் கைது செய்தனர்.
குடும்ப தகராறு
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள எழுவன்பச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமி(வயது 30). இவருக்கும், தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூரை சேர்ந்த கூலி தொழிலாளியான காளிச்சாமி(34) என்பவருக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. 
திருமணத்திற்கு பிறகு லட்சுமி கணவருடன் கரிவலம்வந்தநல்லூரில் வசித்து வந்தார். இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்தநிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் லட்சுமி அடிக்கடி கோபித்து கொண்டு தனது சொந்த ஊரான எழுவன்பச்சேரிக்கு வந்துள்ளார். அவரை கணவர் சமாதானம் செய்து அழைத்துச் செல்வது வாடிக்கையாக இருந்துள்ளது.
திடீர் மாயம்
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென லட்சுமி வீட்டில் இருந்து மாயமானார். அவரை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. தன்னை உறவினர்கள் மற்றும் கணவர் தேடுவதை அறிந்த லட்சுமி அங்குள்ள போலீஸ் நிலையத்தில் ஆஜரானார். இதையடுத்து கணவர் மற்றும் பெற்ே்றாருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். 
போலீஸ் நிலையம் வந்த அவர்களிடம், லட்சுமியை பெற்றோர் வீட்டில் சில நாட்கள் வைத்து கொள்ளுமாறு போலீசார் கூறினர். இதைதொடர்ந்து லட்சுமியை அவரது பெற்றோர் தங்களது வீட்டுக்கு அழைத்து சென்றனர். கணவர் காளிச்சாமியும் அங்கு சென்றார். 
குத்திக்கொலை
இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு காளிச்சாமியும், லட்சுமியும் அங்குள்ள கண்மாய் கரைக்கு சென்றனர். அப்போது அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த காளிச்சாமி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் லட்சுமியை சரமாரியாக குத்தினார். 
அவரது அலறல் சத்தம்கேட்டு அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அங்கு ஓடி சென்றனர். அவர்கள் வருவதை பார்த்ததும் காளிச்சாமி அங்கிருந்து தப்பியோடி விட்டார். கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்த லட்சுமியை மீட்டு சாத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே லட்சுமி இறந்த விட்டதாக தெரிவித்தனர்.
விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்த சாத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜ், ஆலங்குளம் இன்ஸ்பெக்டர் சுந்தரபாண்டியன்,  சப்-இன்ஸ்பெக்டர் முருகேசுவரி, வேலுச்சாமி ஆகியோர் இந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்தினர். மேலும், தலைமறைவாக இருந்த காளிச்சாமியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story