வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி


வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 21 Oct 2021 7:56 PM GMT (Updated: 21 Oct 2021 7:56 PM GMT)

வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி

சேலம், அக்.22-
சேலத்தில் பலத்த மழை பெய்தது. இதனால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதிப்பட்டனர். மேலும் பெத்தநாயக்கன்பாளையத்தில் அதிகபட்சமாக 213 மி.மீ. மழை பதிவானது.
வடகிழக்கு பருவமழை
தமிழகத்தில் வருகிற 26-ந்தேதி வடகிழக்கு பருவ மழை தொடங்க உள்ளதாக வானிலை மையம் அறிவித்து உள்ளது. இந்த நிலையில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.
நேற்று முன்தினம் மதியம் சேலத்தில் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதுடன், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் புகுந்தது. இந்த நிலையில்  சேலத்தில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டமாகவே காணப்பட்டது.
ஒரு சில நேரங்களில் வெயில் அடித்தது. பின்னர் மாலை 3.15 மணி அளவில் குளிர் காற்று வீசியது. தொடர்ந்து பலத்த மழை பெய்யத்தொடங்கியது. சுமார் 1 மணி நேரம் இந்த மழை நீடித்தது. அதன் பிறகும் அவ்வப்போது விட்டு, விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது.
மழை அளவு
பலத்த மழையால் சேலம் 4 ரோடு, பெரமனூர், அழகாபுரம், அம்மாபேட்டை,ரெட்டியூர், சூரமங்கலம், கொண்டலாம்பட்டி ஆகிய பகுதிகளில் பல வீடுகளில் மழை நீர் புகுந்தது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டனர். மேலும் அந்த பகுதியில் உள்ள சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல பெருக்கெடுத்து ஓடியது. ஒரு சில இடங்களில் சாக்கடை கழிவுநீருடன் மழைநீர் கலந்து சென்றது. நேற்று காலை நிலவரப்படி சேலம் மாவட்டத்தில் பதிவான மழை அளவு (மி.மீ.) வருமாறு:-
பெத்தநாயக்கன்பாளையம்-213, சேலம்-33.2, ஏற்காடு-13, ஆத்தூர், எடப்பாடி-11, ஓமலூர்-6, கரியக்கோவில்-5, சங்ககிரி-4.2, ஆணைமடுவு-4, மேட்டூர்-2.8, காடையாம்பட்டி-2.2. 
சிவதாபுரத்தில் வெள்ளம்
சேலம் சிவதாபுரம் பகுதியில் நேற்று பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர். சிவதாபுரம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் வீட்டுக்குள் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் சேதம் அடைந்தன. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். எனவே வீடுகளுக்குள் மழைநீர் புகுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றதால், மாணவர்கள் சிரமப்பட்டனர். இதே போல தாதகாப்பட்டி கேட், சவுந்தர் நகர் பகுதிகளில் உள்ள வீடு, கடைகளில் மழை நீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள், கடைக்காரர்கள் சிரமப்பட்டனர்.
தடுப்பணை நிரம்பியது
ஆத்தூர் நரசிங்கபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம்  பெய்த கன மழையால் ஆத்தூர் விநாயகபுரத்தில் உள்ள வசிஷ்ட நதி தடுப்பணை நிரம்பி வழிகிறது. இந்த ஆண்டு 2-வது முறையாக வசிஷ்ட நதி தடுப்பணை நிரம்பி வழிவதால் ஆத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் வசிஷ்ட நதி தடுப்பணையை பார்த்து மகிழ்ந்து வருகின்றனர்
இதேபோல ஆத்தூர் அருகே கல்லாநத்தம் கிராமத்தின் வடக்கே உள்ள முட்டல் ஏரி மற்றும் ஆனைவாரி நீர்வீழ்ச்சிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

Next Story