தினத்தந்தி புகார் பெட்டி
தஞ்சை மாவட்டத்தில் உள்ள குறைகள் புகார் பெட்டியில் கூறப்பட்டுள்ளது.
தொற்று நோய் பரவும் அபாயம்
தஞ்சாவூர் மாநகராட்சி மருத்துவக்கல்லூரி அருகில் ஸ்ரீநகர், கூட்டுறவு நகர் மற்றும் கணேஷ் நகர் சாலை வருடக்கணக்கில் சாக்கடை சாலையாக மாறி பயன்படுத்த முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. அந்த சாலையை பயன்படுத்தும் ஆர்.எஸ். நகர், கணேஷ் நகர், தெற்கு பூக்கொல்லை, வானவில் நகர், கண்ணம்மா நகர், மானோஜிபட்டி ஆகிய பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே மழைக்கால அபாயத்தை உணர்ந்து மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
-த.கலையரசன், தெற்கு பூக்கொல்லை.
குண்டும், குழியுமான சாலை
தஞ்சை மாதாக்கோட்டை அந்தோணியார் கோவில் தெருவில் சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் மழைக்காலங்களில் சாலையில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் வாகனங்களில் செல்வோர் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். பள்ளங்களில் மழைநீர் தேங்குவதால் கொசுகள் உற்பத்தியாகி டெங்கு, சிக்குன்குனியா உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. இந்த சாலையை சீரமைக்கக்கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும், இதுவரை சீரமைக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்தோணியார் கோவில் தெருவில் புதிதாக தார்ச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பொதுமக்கள்,அந்தோணியார் கோவில்தெரு.
இடிந்து விழும் நிலையில் மோட்டார் அறை
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா பாச்சூர் தென்வளாகத்தில் குடிநீர் மேல் நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இதன் அருகில் உள்ள மோட்டார் அறை மிகவும் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. கிராம சபை கூட்டத்தில் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மேலும் அசம்பாவிதம் ஏற்படும் முன்பே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாகும்.
-கிராமமக்கள், பாச்சூர்.
வீணாகும் குடிநீர்
தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் ஒன்றியம், தொண்டராயன்பாடி கிராமத்தில் மெயின் ரோட்டில் 2 இடங்களில் குடிநீர் குழாய் உடைந்து பல மாதங்களாக குடிநீர் வீணாகி ரோட்டில் ஓடிக்கொண்டு இருக்கிறது. இதனால் சாலையில் குடிநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகும் வாய்ப்பும் உள்ளது. மேலும் பல இடங்களில் குடி தண்ணீர் கிடைக்காமல் அவதிபடும் நிலையில் தொண்டராயன்பாடி கிராமத்தில் குடிதண்ணீர் சாலையில் ஓடுகிறது என்று பொதுமக்கள் புலம்பி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உடைப்பு ஏற்பட்ட இடங்களை சரிசெய்து தர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-கிராமமக்கள், தொண்டராயன்பட்டி.
இரும்புகம்பி அகற்றப்படுமா?
தஞ்சை சோழன் சிலை பஸ் நிறுத்தம் அருகில் உள்ள நடைமேடை பாதையில், அபாயகரமான உடைந்த இரும்பு கம்பி உள்ளது. அதன் வழியே செல்லும் மக்கள் அனைவரும் அச்சத்துடன் சென்று வருகிறார்கள். பள்ளி செல்லும் மாணவ- மாணவிகள் பலர் தடுக்கி விழுந்து காயம் அடைந்து உள்ளனர். பல மாதங்களாக இந்த உடைந்த இரும்பு கம்பி இன்னும் முழுமையாக அகற்றப்படாமல் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடைபாதையில் உள்ள இரும்புகம்பியை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்
-வீ.கலைசெல்வன், வடக்கூர்.
சாக்கடைக்கழிவுகள் அகற்றப்படுமா?
தஞ்சாவூர் டவுன் 10-வது வார்டு கும்பகோணத்தான் தெருவில் பாதாள சாக்கடை சுத்தம் செய்துவிட்டு கழிவுகளை அப்புறப்படுத்தாமல், கழிவுகள் மற்றும் மண்ணை அள்ளி அப்புறப்படுத்தாமல் அதன் அருகிலேயே குவித்து போட்டு இருக்கிறார்கள். இதனால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுகள் மற்றும் மண்ணை உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வீ.ஜோதிமணி, தஞ்சாவூர்.
Related Tags :
Next Story