திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் சொத்துகளை மீட்க வேண்டும்


திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் சொத்துகளை மீட்க வேண்டும்
x
தினத்தந்தி 21 Oct 2021 8:18 PM GMT (Updated: 21 Oct 2021 8:18 PM GMT)

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் சொத்துகளை மீட்க வேண்டும் என்று தேவபிரசன்னம் பார்க்கும் நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது. கோவில் கும்பாபிஷேக தேதி இன்று அறிவிக்கப்படுகிறது.

திருவட்டார், 
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் சொத்துகளை மீட்க வேண்டும் என்று தேவபிரசன்னம் பார்க்கும் நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது. கோவில் கும்பாபிஷேக தேதி இன்று அறிவிக்கப்படுகிறது.
ஆதிகேசவ பெருமாள் கோவில்
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடந்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவிலுக்கு வந்த அமைச்சர் சேகர்பாபு விரைவில் கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்யப்படும் என்று கூறினார்.
இந்தநிலையில் கும்பாபிஷேகம்  எப்போது நடத்தலாம் என்பதை அறிந்து கொள்வதற்காகவும், பரிகார பூஜைகள் செய்வது குறித்தும் தேவபிரசன்னம் பார்க்கும் நிகழ்ச்சி நேற்று திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் தொடங்கியது.
சோழி உருட்டி
அங்கு உதய மார்த்தாண்ட மண்டபம் எதிரில் உள்ள மண்டபத்தில் ராசி கட்டம் வரையப்பட்டு சோழி உருட்டி தேவ பிரசன்னம் பார்க்கப்பட்டது.
ராசி கட்டங்களில் பூஜைக்கு பிறகு சிறுவனை வைத்து, விரும்பிய கட்டத்தில் தங்கம் வைக்க கூறிய பிறகு, அதன் அடிப்படையிலான விவரங்களை வாசுதேவன் பட்டத்திரி, அவருடன் வந்திருந்த ஜோதிட நிபுணர்களுடன் ஆலோசித்து கூறினார்.
 பக்தர்களுக்கு தோஷம்
தேவ பிரசன்னத்தில் கூறப்பட்டிருப்பதாவது:-
கோவிலில் பகவானின் தெய்வ அருள் எப்போதும் உள்ளது. ஆனால் பக்தர்களுக்கு சில தோஷங்கள் ஏற்பட்டுள்ளது. மேலும் கோவில் கும்பாபிஷேக பணிகள் தாமதமாகி கொண்டே போகிறது. எனவே பக்தர்களின் தோஷங்கள் நீங்கவும், கும்பாபிேஷக பணிகள் விரைந்து நடத்தவும் உடனே மிருத்துஞ்சய ஹோமம் நடத்துவது பரிகாரமாக இருக்கும். கன்னி ராசியில் வியாழ தோஷம் உள்ளதால் ஈஸ்வரனை வழிபட்டு அதற்கான பரிகாரங்களை நடத்தினால் எதிர்காலத்தில் கோவிலை சிறப்பாக கொண்டு செல்ல முடியும்.
கடவுளுக்கு தோஷம் ஏற்படும் விதத்தில் இங்கே சில செயல்கள் நடந்துள்ளது. கடவுளை விட தாங்கள் தான் மிகவும் பெரியவர் என்ற எண்ணத்தில் சிலர் செயல்படுகிறார்கள். கோவில் தொடர்புடைய தேவிக்கான பரிகார பூஜைகள் நடத்த வேண்டும். கோவில் சொத்துகளை சிலர் அபகரித்து உள்ளதாக தெரிகிறது. கோவில் பொருட்கள் திருட்டு போய் உள்ளது. இருக்கின்ற சொத்துக்களையாவது பாதுகாக்க வேண்டும்.
சொத்தை மீட்க வேண்டும்
கோவிலுக்கு சொந்தமாக இருந்த சொத்தில் 40 சதவீத சொத்து கூட இன்று கோவிலில் இல்லை. பெரும்பாலானவை ஆக்கிரமிப்பில் உள்ளது. கும்பாபிஷேகத்துக்கு முன்னராவது அவற்றை மீட்டு வழிபாடு நடத்த வேண்டும். அறநிலையத்துறை ஓரளவுக்கு கோவிலுக்கு தேவையானவற்றை செய்கிறது. அத்துடன் பக்தர்கள் பங்களிப்பும் இதில் இருக்க வேண்டும். 
கோவில் திருப்பணிக்கு எதிர்பார்ப்பதை விட அதிகமான நிதி கோவிலுக்கு கிடைக்கும். கோவிலில் சுத்தமான சந்தனம் பகவானுக்கு சார்த்துவது இல்லை. எனவே சந்தன கட்டையை உரைத்து பகவானுக்கு சந்தனம் சார்த்த வேண்டும். சுவாமி வாகனங்கள் புனரமைத்து சுவாமி எழுந்தருளலுக்கு பயன்படுத்த வேண்டும். நிறுத்தப்பட்ட எழுந்தருளல் பூஜைகளை முறையாக நடத்த வேண்டும். ஆகம ஆச்சார விதிகளை கடைப்பிடித்து கோவில் பூஜைகள் நடத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. இது பக்தர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிகழ்ச்சியில் கோவில் மேலாளர் மோகன்குமார், அறநிலையத்துறை பொறியாளர் ராஜகுமார், கோவில் தந்திரிகள் சங்கர நாராயணரு, சஜித் சங்கர நாராயணரு, குமரி மாவட்ட வள்ளலார் பேரவை தலைவர் சுவாமி பத்மேந்திரா, திருப்பூர் தொழிலதிபர்கள் செல்வராஜ், தர்மலிங்கம், திற்பரப்பு தொழிலதிபர் அனில்குமார், திருவிதாங்கூர் அரண்மனை பிரதிநிதி லெட்சுமி பாய், அறங்காவலர் குழு தலைவர் சிவகுற்றாலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இன்று கும்பாபிஷேக                    தேதி அறிவிப்பு
தேவபிரசன்னம் பார்க்கும் நிகழ்ச்சி மாலை 5.45 மணி வரை நடந்தது. சூரியன் மறைவுக்கு பிறகு தேவபிரசன்னம் பார்க்கும் நிகழ்ச்சி தொடரக்கூடாது என்பதால் நிறுத்தப்பட்டது. இன்று காலை நடக்கும் பரிகார பூஜையான மிருத்துஞ்சய ஹோமத்தை தொடர்ந்து தேவபிரசன்னம் பார்க்கும் நிகழ்ச்சி தொடரும். அப்போது கும்பாபிஷேகத்துக்கான தேதியும் தேர்வு செய்யப்படும். அதாவது, 3 நாட்கள் தேர்வு செய்யப்பட்டு, பின்னர் அரசுக்கு உகந்த நாளில் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story