மாத்தூர் தொட்டிப்பாலத்தில் செடி, கொடிகளை அகற்ற வேண்டும்


மாத்தூர் தொட்டிப்பாலத்தில்           செடி, கொடிகளை அகற்ற வேண்டும்
x
தினத்தந்தி 22 Oct 2021 1:54 AM IST (Updated: 22 Oct 2021 1:54 AM IST)
t-max-icont-min-icon

மாத்தூர் தொட்டிப்பாலத்தில் வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்ற வேண்டும் என தினத்தந்தியில் வெளியான செய்தியை சுட்டிக்காட்டி குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

நாகர்கோவில், 
மாத்தூர் தொட்டிப்பாலத்தில் வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்ற வேண்டும் என தினத்தந்தியில் வெளியான செய்தியை சுட்டிக்காட்டி குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
குறைதீர்க்கும் கூட்டம்
குமரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார். இணை இயக்குனர் (வேளாண்மை) சத்திய ஜோஸ், துணை இயக்குனர் (தோட்டக்கலை) ஷீலா ஜாண், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வசந்தி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் வீராசாமி (பொது), வாணி (விவசாயம்), கால்நடைத்துறை மண்டல இணை இயக்குனர் சாமிநாதன், வேளாண்மை துணை இயக்குனர் (வணிகம்) ஹாணிஜாய் சுஜாதா, வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் (பொறுப்பு) ெசார்ணலதா மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் விவசாயிகளிடம் கலெக்டர் அரவிந்த் கோரிக்கை மனு வாங்கினார்.
‘தினத்தந்தி’க்கு பாராட்டு
அதன் பிறகு கூட்டத்தில் விவசாய பிரதிநிதிகள் வைத்த கோரிக்கைகள் விவரம் வருமாறு:-
புலவர் செல்லப்பா;- மாத்தூர் தொட்டிப்பாலம் குறித்து சரியாகவும், விளக்கமாகவும் தினத்தந்தி நாளிதழ் இன்று(அதாவது நேற்று) கட்டுரையாக பிரசுரம் செய்துள்ளது (அப்போது அவர் தான் கொண்டு வந்திருந்த தினத்தந்தி நாளிதழில் கட்டுரை பிரசுரமாகி இருந்த பக்கத்தை கையில் பிடித்தபடி கலெக்டரிடம் காண்பித்தார்). அதற்காக தினத்தந்தி நாளிதழுக்கு விவசாயிகள் சார்பில் எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் (அப்போது கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் கைதட்டினர்). பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த மாத்தூர் தொட்டிப்பாலத்தை காணவரும் சுற்றுலா பயணிகளிடம் உள்ளாட்சி அமைப்பு கட்டணம் வசூல் செய்கிறது. ஆனால் அந்த பாலத்தை பராமரிக்கும் பணிகளை உள்ளாட்சித்துறை செய்வதில்லை. ஆனால் பாலத்தை பொதுப்பணித்துறைதான் பராமரிக்க வேண்டும் என்று உள்ளாட்சி அமைப்பு நிர்வாகிகள் கூறுகிறார்கள். பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் உள்ளாட்சித்துறைக்கு அங்கு என்ன வேலை? அந்த பாலத்தை சரியாக பராமரிக்கப்படவில்லை என்று அந்த கட்டுரையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இதை நாங்களும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை வலியுறுத்தியுள்ளோம். எனவே மாத்தூர் தொட்டிப்பாலத்தில் வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்ற வேண்டும். பாலத்திற்கு வர்ணம் பூசி புதுபொலிவுபெற செய்ய வேண்டும். பாலத்தில் உள்ள நீர் கசிவுகளை சரி செய்ய வேண்டும், என்றார்.
உரிய நிவாரணம்
மேலும் பல விவசாயிகள் பேசும் போது கூறியதாவது:-
குமரி மாவட்டத்தில் மழை சேதத்தை முழுமையாக கணக்கிட்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். சுசீந்திரம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நெடுஞ்சாலை காரணமாக சுசீந்திரம் மற்றும் தேரூர் பகுதியில் மீண்டும் தண்ணீர் தேங்குகிறது. மருங்கூர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் விவசாயிகளிடம் இருந்து ஒரு லிட்டர் பால் ரூ.27-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. மாட்டுத்தீவனம் ரூ.975-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் மற்ற பால் உற்பத்தியாளர் சங்கத்தில் விவசாயிகளிடம் இருந்து ஒரு லிட்டர் பால் ரூ.30-க்கு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. மாட்டு தீவனம் ரூ.950-க்கு விற்கப்படுகிறது. எனவே இது தொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குழித்துறை தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் செல்வதற்கு இடையூறாக உள்ள மரங்களை வெட்டி அகற்ற வேண்டும். விவசாயிகள் தங்களது விளைபொருட்களை நேரடியாக விற்பனை செய்ய திங்கள் சந்தை பகுதியில் உழவர் சந்தை அமைக்க வேண்டும்.
இவ்வாறு விவசாய பிரதிநிதிகள் கூறினர்.
அதிகாரிகள் பதில்
இதற்கு அதிகாரிகள் பதில் அளித்தபோது, “மழை சேதங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும். மருங்கூர் பால் உற்பத்தியாளர் சங்கத்தில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். நமக்கு நாமே திட்டம் மூலம் குளங்களை தூர்வாரலாம். அரசின் பங்களிப்பு மற்றும் பொதுமக்களின் பங்களிப்பு இருந்தால் தூர்வார முடியும். ஆனால் குளத்தில் எடுக்கப்படும் மண்ணை எடுத்துச் செல்லக் கூடாது. கரையிலேயே தான் கொட்ட வேண்டும். மாத்தூர் தொட்டி பாலத்தில் செடி, கொடிகள் வளர்ந்து இருக்கிறதா? என ஆய்வு செய்து அகற்றப்படும் திங்கள்சந்தை பகுதியில் உழவர் சந்தை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயப்படும்.” என்றனர்.
கூட்டத்தில் விவசாய பிரதிநிதிகள் வைத்த பல்வேறு கோரிக்கைகளுக்கு மதிப்பீடு தயாரிக்கப்பட்டு உள்ளது. போதுமான நிதி இல்லை என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது. அதற்கு அரசிடம் இருந்து நிதி பெற்று தாருங்கள் என்று விவசாய பிரதிநிதிகள் மீண்டும் கோரிக்கை வைத்தனர். கூட்டத்தில் விவசாய பிரதிநிதிகள் தரப்பில் பாசனத்துறை சேர்மன் வின்ஸ் ஆன்றோ, பத்மதாஸ், முருகேசபிள்ளை, விஜி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வழக்கமாக கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள நாஞ்சில் கூட்டரங்கில் நடக்கும். ஆனால் நேற்று வருவாய் கூட்டரங்கில் நடந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story