ரெயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரில் சிக்கிய அரசு பஸ்
வள்ளியூரில் ரெயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழை நீரில் அரசு பஸ் சிக்கியது. அதில் இருந்த பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
வள்ளியூர்:
நெல்லை மாவட்டம் வள்ளியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் கடும் வெயில் அடித்தது. மதியம் திடீரென்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
தொடர்ந்து இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக இந்த மழை நீடித்தது. இந்த மழையால் வள்ளியூர் மெயின்ரோடு, புதிய பஸ் நிலையம் பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வெப்பம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில் பலத்த மழையால் வள்ளியூர்-திருச்செந்தூர் மெயின் ரோட்டில் உள்ள ெரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் குளம் போல் தேங்கி கிடந்தது.
அப்போது, ஆத்துக்குறிச்சியில் இருந்து வள்ளியூருக்கு அரசு பஸ் ஒன்று வந்தது. அந்த பஸ்சில் பயணிகள் ஏராளமானவர்கள் இருந்தனர்.
அந்த பஸ் மழைநீரை கடக்க முயன்றபோது திடீரென்று பழுதாகி தண்ணீரில் சிக்கியது. இதனால் பஸ்சை மேற்கொண்டு டிரைவரால் இயக்க முடியவில்லை. இதனால் அந்த பஸ்சில் இருந்த பயணிகள் வெளியே வரமுடியாமல் தவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினர் அங்கு விரைந்து சென்றனர். பஸ்சில் இருந்து பயணிகள் வெளியே வருவதற்காக படிக்கட்டு முன்பு கட்ைடகளை அமைத்து பாதையை ஏற்படுத்தி அனைவரையும் பத்திரமாக மீட்டனர். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. அந்த வழியாக சென்ற வாகனங்கள் மாற்றுப்பாைதயில் இயக்கப்பட்டன.
Related Tags :
Next Story