தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் 7 பேர் குண்டர் சட்டத்தில் கைது


தூத்துக்குடி மாவட்டத்தில்  ஒரே நாளில் 7 பேர் குண்டர் சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 22 Oct 2021 4:27 PM IST (Updated: 22 Oct 2021 4:27 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் 7 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் 7 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
பணம் பறிப்பு
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு காப்புலிங்கம்பட்டியை சேர்ந்த செல்வம் மகன் சங்கிலிபாண்டி (வயது 19), கோவில்பட்டி பங்களா தெருவை சேர்ந்த பெருமாள் மகன் மாடசாமி என்ற கோபி (35), கயத்தாறு காப்புலிங்கம்பட்டியை சேர்ந்த மாடசாமி மகன் செல்வம் (39), கோவில்பட்டி மந்திதோப்பு பகுதியை சேர்ந்த முனியசாமி மகன் சேதுபதி என்ற சேது (24) ஆகிய 4 பேரையும் கயத்தாறு போலீசார், தொழிலதிபரை காரில் கடத்தி பணம் பறித்த வழக்கில் கைது செய்தனர்.
இதே போன்று காட்டுநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த கருப்பசாமி மகன் மாரிச்செல்வம் (25) என்பவரை கொலை முயற்சி வழக்கில் எப்போதும்வென்றான் போலீசார் கைது செய்தனர்.
விளாத்திகுளம் ஆற்றங்கரை பகுதியை சேர்ந்த பெருமாள் மகன் சரத்குமார் (24) என்பவர் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக விளாத்திகுளம் அனைத்து மகளிர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி வடக்கு சோட்டையன்தோப்பை சேர்ந்த ஜேசுராஜா மகன் டால்வின் (35) என்பவர் 16 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்ததாக தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
குண்டர் சட்டம்
இவர்கள் 7 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பரிந்துரை செய்தார். அதன்பேரில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சங்கிலிபாண்டி, மாடசாமி என்ற கோபி, செல்வம், சேதுபதி என்ற சேது, மாரிச்செல்வம், சரத்குமார், டால்வின் ஆகிய 7 பேரையும் கைது செய்ய உத்தரவிட்டார்.
இந்த உத்தரவு நகலை சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பாளையங்கோட்டை ஜெயிலில் வழங்கினர்.
159 பேர்
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 159 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story