தூத்துக்குடி அருகே மீன்பிடிக்க சென்ற மீனவர் நடுக்கடலில் மின்னல் தாக்கி பலி
தூத்துக்குடி அருகே மீன்பிடிக்க சென்ற மீனவர் நடுக்கடலில் மின்னல் தாக்கி பலியானார்
தூத்துக்குடி:
தூத்துக்குடி அருகே மீன் பிடிக்க சென்றபோது, நடுக்கடலில் மின்னல் தாக்கி மீனவர் இறந்தார்.
மழை
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று அதிகாலை பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. கோவில்பட்டி பகுதியில் நேற்று முன்தினம் பெய்த மழையால் ரோடுகளில் மழை நீர் தேங்கியது. இந்த நிலையில் தூத்துக்குடி அருகே மின்னல் தாக்கியதில் மீனவர் பலியானார்.
இதுபற்றிய விவரம் வருமாறு:-
தூத்துக்குடி அருகே உள்ள வெள்ளப்பட்டி 50 வீடு காலனியை சேர்ந்தவர் அந்தோணி பாஸ்கர். இவருடைய மகன் அந்தோணி ஜெசுலர் (வயது 29), மீனவர். இவர் நேற்று முன்தினம் வெள்ளப்பட்டியில் இருந்து தனது சகோதரர் சதீஷ் உடன் பைபர் படகில் மீன்பிடிக்க சென்றார்.
மின்னல் தாக்கி பலி
மீன்களை பிடித்துக் கொண்டு நேற்று காலையில் வெள்ளப்பட்டியில் இருந்து சுமார் 3 கடல் மைல் தொலைவில் வந்து கொண்டு இருந்தார். அப்போது திடீரென கடலில் பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்தது.
அந்தநேரத்தில் நடுக்கடலில் படகில் வந்து கொண்டிருந்த அந்தோணி ஜெசுலர் மீது மின்னல் தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த அந்தோணி ஜெசுலரை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தருவைகுளம் கடலோர பாதுகாப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story