மீன்பிடித்து கொண்டிருந்தபோது தரங்கம்பாடி மீனவர்கள் மீது தாக்குதல்


மீன்பிடித்து கொண்டிருந்தபோது தரங்கம்பாடி மீனவர்கள் மீது தாக்குதல்
x
தினத்தந்தி 22 Oct 2021 9:20 PM IST (Updated: 22 Oct 2021 9:20 PM IST)
t-max-icont-min-icon

மீன்பிடித்து கொண்டிருந்தபோது தரங்கம்பாடி மீனவர்கள் தாக்கப்பட்டனர். இதில் படுகாயம் அடைந்த 4 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வேதாரண்யம்:
மீன்பிடித்து கொண்டிருந்தபோது தரங்கம்பாடி மீனவர்கள் தாக்கப்பட்டனர். இதில் படுகாயம் அடைந்த 4 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தரங்கம்பாடி மீனவர்கள்
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை பகுதியில் மீன்பிடி சீசன் என்பதால் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் இங்கு தங்கி மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். 
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியை சேர்ந்த குப்புசாமி(வயது 42) என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அவரும், அதே ஊரை சேர்ந்த சின்னையன்(50), தர்மலிங்கம்(40), பெருமாள்(67) ஆகிய 4  மீனவர்களும் நேற்று முன்தினம் மாலை கோடியக்கரையில் இருந்து மீன்பிடிக்க சென்றனர். 
இரும்பு பைப்பால் தாக்குதல்
இவர்கள் கோடியக்கரைக்கு தெற்கே சுமார் 10 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது அங்கு ஒரு படகில் மீனவர்கள் 5 பேர் வந்தனர். அவர்களில் 2 பேர் கையில் இரும்பு பைப்புடன் தரங்கம்பாடி மீனவர்கள் படகில் ஏறி குப்புசாமி, சின்னையன், தர்மலிங்கம், பெருமாள் ஆகிய 4 பேரையும் சரமாரியாக தாக்கி விட்டு தாங்கள் வந்த படகில் ஏறி தப்பிச்சென்றனர்.
இதில் படுகாயம் அடைந்த 4 மீனவர்களும் தங்களது படகில் நேற்று அதிகாலை கரைக்கு திரும்பினர். இதனைத்தொடர்ந்து அவர்களை உறவினர்கள் மற்றும் சக மீனவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர்களை அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பரபரப்பு
மீன்பிடித்து கொண்டிருந்தபோது படகில் சிக்கி வலை சேதம் அடைந்ததால் தரங்கம்பாடி மீனவர்கள் தாக்கப்பட்டது தெரிய வந்தது. தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வரும் நிலையில் தமிழக மீனவர்களே தாக்கிக்கொண்ட சம்பவம் மீனவ கிராமங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
இதுகுறித்து வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story