பழனி குளத்து ரவுண்டானாவில் போக்குவரத்து சிக்னல் அமைப்பு
பழனி குளத்து ரவுண்டானாவில் புதிதாக போக்குவரத்து சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது.
பழனி:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடாக திகழும் பழனி சிறந்த ஆன்மிகம், சுற்றுலா சார்ந்த நகரமாக விளங்குகிறது. இங்கு வெளியூர், வெளிமாநில பக்தர்கள், சுற்று வட்டார மக்கள் என தினமும் ஆயிரக்கணக்கானோர் வருகை தருகின்றனர். இதனால் வார விடுமுறை, விசேஷ நாட்களில் அடிவாரம், நகர் பகுதியில் கூட்ட நெரிசல் அதிகம் காணப்படும். குறிப்பாக குளத்து ரவுண்டானாவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கமாக உள்ளது. இந்த ரவுண்டானா திண்டுக்கல் சாலை, தாராபுரம் சாலை, மார்க்கெட் சாலை, அடிவாரம் சாலை என நான்கு சந்திப்புகளை கொண்டது. இதனால் காலை, மாலையில் கார், லாரி, மோட்டார் சைக்கிள் என நூற்றுக்கணக்கான வாகனங்கள் செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவது வாடிக்கையாக இருந்து வந்தது. மேலும் சில நேரங்களில் வாகன விபத்துகளும் நடந்து வந்தது.
இந்தநிலையில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்து ஏற்படுவதை தவிர்க்கும் வகையில், குளத்து ரவுண்டானாவில் போக்குவரத்து சிக்னல் அமைக்க போலீசார் முடிவு செய்தனர். அதன்படி ரவுண்டானாவின் நான்கு சந்திப்பு பகுதிகளிலும் சிக்னல் அமைக்கும் பணி நடைபெற்றது. தற்போது பணிகள் முடிவடைந்து நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. இதனால் குளத்து ரவுண்டானாவில் சிக்னல் விதிகளை பின்பற்றி வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் குறைந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story