பேரிகை அருகே குட்டையில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி; உடலை எடுக்க விடாமல் உறவினர்கள் போராட்டம்


பேரிகை அருகே குட்டையில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி; உடலை எடுக்க விடாமல் உறவினர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 22 Oct 2021 10:04 PM IST (Updated: 22 Oct 2021 10:04 PM IST)
t-max-icont-min-icon

பேரிகை அருகே குட்டையில் மூழ்கி 2 சிறுவர்கள் பலியாகினர். அவர்களது உடலை எடுக்க விடாமல் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஓசூர்:
சிறுவர்கள்
கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை அருகே உள்ள அத்திமுகம் கிராமத்தை சேர்ந்தவர் முன்னா. இவருடைய மகன் ஷபீர் (வயது 14). இவன் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். இதேபோல் அதே பகுதியை சேர்ந்தவன் ரவி என்பவரது மகன் அசோக் (11). இவன் அதே பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான். இவர்கள் 2 பேரும் நண்பர்கள்.
சிறுவர்கள் 2 பேரும் நேற்று மாலை அத்திமுகம் பகுதியில் உள்ள ஒரு குட்டைக்கு குளிக்க சென்றனர். அங்கு குளித்தபோது அவர்கள் திடீரென தண்ணீரில் மூழ்கினர். இதையறிந்த அக்கம் பக்கத்தினர் அங்கு விரைந்து சென்றனர். 
தண்ணீரில் மூழ்கி பலி
மேலும் இதுகுறித்து பேரிகை போலீஸ், தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு துறையினர் குட்டைக்கு வந்து, சிறுவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் 2 பேரும் தண்ணீரில் மூழ்கி பலியானது தெரிந்தது. பின்னர் சிறுவர்கள் பிணமாக மீட்கப்பட்டனர்.
போலீசார் சிறுவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்ப முயன்றனர். அப்போது அவர்களின் உறவினர்கள் உடலை எடுக்க விடாமல் தடை செய்தனர்.
சாலை மறியல்
மேலும் சிறுவர்களின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்கக்கோரி அந்த பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போராட்டம் குறித்து தகவல் அறிந்த ஓசூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) சிவலிங்கம் அங்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஆனால் அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. நேற்று இரவு வரை போராட்டம் நீடித்தது குறிப்பிடத்தக்கது.

Next Story