விரைவில் சட்ட பேரவையில் அறிக்கை சமர்ப்பிப்போம்


விரைவில் சட்ட பேரவையில் அறிக்கை சமர்ப்பிப்போம்
x
தினத்தந்தி 22 Oct 2021 10:06 PM IST (Updated: 22 Oct 2021 10:06 PM IST)
t-max-icont-min-icon

கடந்த 10 ஆண்டுகளில் நடந்த குறைகளை ஆய்வு செய்து விரைவில் சட்ட பேரவையில் அறிக்கை சமர்ப்பிப்போம் என பொது கணக்கு குழு தலைவர் செல்வப்பெருந்தகை கூறினார்.

திருவாரூர்:
கடந்த 10 ஆண்டுகளில் நடந்த குறைகளை ஆய்வு செய்து விரைவில் சட்ட பேரவையில் அறிக்கை சமர்ப்பிப்போம் என பொது கணக்கு குழு தலைவர் செல்வப்பெருந்தகை கூறினார்.
ஆய்வு 
திருவாரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு சட்ட பேரவையின் பொது கணக்கு குழுத்தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் பொது கணக்கு குழு உறுப்பினர்கள் பூண்டி.கே.கலைவாணன், சரஸ்வதி, சிந்தனை செல்வன், சுதர்சனம், வேல்முருகன், ஜவாஹிருல்லா, மாரிமுத்து, சட்டசபை பேரவை செயலர் சீனிவாசன் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் உடனிருந்தார்.
முன்னதாக ஆணை வடபாதி பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தின் பணிகள் குறித்தும் ஆய்வு செய்தனர். தொடர்ந்து எண்கண் பகுதிக்குட்பட்ட மகளிர் சுகாதார வளாகம், குடவாசல் பகுதியில் உள்ள அரசு கல்லூரியின் கட்டுமான தரத்தினையும், கொரடாச்சேரி பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்  மாணவர்களுக்கான வகுப்பறைகள், கழிவறைகள் அடிப்படை வசதிகள் மற்றும் சுகாதாரம் குறித்தும், கொரடாச்சேரி பகுதியில் உள்ள கால்நடை நோய் கட்டுப்பாட்டு மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும், நெடும்பலம் அரசு விதை பண்ணையினையும், திருத்துறைப்பூண்டி அரசு கல்லூரியினையும், திருவாரூர் கிடாரங்கொண்டான் அரசு ஆதிதிராவிட மாணவர் விடுதியையும் ஆய்வு செய்தனர்.
புதிய கட்டிடம் செயல்பாட்டிற்கு வரும் 
பின்னர் சட்ட பேரவை பொது கணக்கு குழு தலைவர் செல்வப்பெருந்தகை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
எங்களுக்கு வழங்கப்பட்ட தணிக்கை அறிக்கையின்படி திருவாரூர் மாவட்டத்தில் இன்று (நேற்று) பல்வேறு இடங்களில் ஆய்வு செய்து வருகிறோம். அங்கன்வாடி மையம் தற்போது வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. புதிய கட்டிடம் கட்டப்பட்டுவிட்டது. 15 தினங்களுக்குள் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.
குடவாசல் அரசுக்கல்லூரி 5 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்டுள்ளது. ஐகோர்ட்டால் கடந்த ஆண்டு தான் ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதில் இந்து சமய அறநிலையத்துறை நிலங்களை அரசு கையகப்படுத்த கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
குறைகள் கண்டுபிடிப்பு 
கடந்த 4 வருடங்களில் பல்வேறு வேலைகளை குடவாசல் கல்லூரிக்கு செய்திருக்கலாம். ஆனால் செய்யாமல் விட்டிருக்கிறார்கள். இதனால் அனைத்து சுமைகளும் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை செயலாளர், கல்வித்துறை செயலாளர் மற்றும் அறநிலையத்துறை செயலாளர் ஆகியோரை சென்னைக்கு வரவழைத்து உடனடியாக இந்த பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். 
10 ஆண்டுகளாக நடைபெற்ற ஆட்சியில் நிறைய குறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனை ஆய்வு செய்யவே வந்துள்ளோம். கடந்த அரசு வரைவு திட்டம், அனுமதி போன்றவைகளை சரியாக கையாளவில்லை. எனவே தான் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. 
அறிக்கையை சமர்ப்பிப்போம் 
இதனை மத்திய கணக்காயர் குழு கண்டுபிடித்து கொடுத்துள்ளது. அதன் அடிப்படையில் ஆய்வு செய்து வருகிறோம். ஆய்வு முடிந்த பின்னர் விரைவில் சட்டபேரவையில் அறிக்கையை சமர்ப்பிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் சட்டசபை பேரவை துணை செயலர்கள் தேன்மொழி, ரேவதி, மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் தெய்வநாயகி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தியாகராஜன், பொதுப்பணித்துறை செயற்பொறியளர் (கட்டிடங்கள்) மோகனசுந்தரம் மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story