விக்கிரவாண்டி ஒன்றியக்குழு தலைவராக கல்லூரி மாணவி சங்கீதா அரசி தேர்வு அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவேன் என பேட்டி
விக்கிரவாண்டி ஒன்றியக்குழு தலைவராக கல்லூரி மாணவி சங்கீதா அரசி தேர்வு செய்யப்பட்டார். அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கை யையும் நிறைவேற்றுவேன் என்று அவர் தெரிவித்தார்.
விக்கிரவாண்டி,
விழுப்புரம் மாவடடம் விக்கிரவாண்டி ஒன்றியக்குழு தலைவர் மற்றும் துணைத்தலைவரை தேர்வு செய்வதற்கான மறைமுக தேர்தல் நேற்று காலை ஒன்றிய அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் ஜோதி தலைமையில் நடந்தது.
இந்த ஒன்றியத்தில் உள்ள 21 வார்டுகளில் தி.மு.க. 16 இடங்களிலும், அ.தி.மு.க. 3 இடங்களிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி 2 இடங்களிலும் வெற்றி பெற்றது.
இந்த நிலையில், ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கு தி.மு.க.வை சேர்ந்த 17-வது வார்டு உறுப்பினரான சங்கீதா அரசி போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை தேர்தல் அலுவலர் ஜோதியிடம் தாக்கல் செய்தார். இவரை எதிர்த்து போட்டியிட யாரும் மனுதாக்கல் செய்யவில்லை. இதையடுத்து அவர் போட்டியின்றி வெற்றி பெற்றார்.
யாருக்கும் கிடைக்காத வாய்ப்பு
21 வயதான சங்கீதா அரசி, நடப்பு கல்வி ஆண்டு இறுதியில் தான் பி.எஸ்சி. கணிதம் படித்து முடித்தார். படிப்பு முடிந்தவுடன் தேர்தலில் நின்று வெற்றி பெற்று, தற்போது ஒன்றியக்குழு தலைவர் பதவியையும் வகிக்க உள்ளார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த நிலையில் தனது மக்கள் பணி குறித்து, சங்கீதா அரசி நிருபர்களிடம் கூறுகையில், இளங்கலை பட்டப்படிப்பு படித்து முடித்துள்ளேன். கல்லூரி படிப்பை முடித்தவுடன், தற்போது யாருக்கும் கிடைக்காத ஒரு வாய்ப்பாக மக்கள் சேவையாற்றும் பணி எனக்கு கிடைத்துள்ளது. ஒன்றியத்திலுள்ள அனைத்து தரப்பு மக்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்றுவேன் என்று தெரிவித்தார்.
ஒன்றியக்குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள சங்கீதா அரசியின் தந்தை ஜெயரவிதுரை ஆவார்.
இவர் தி.மு.க. ஒன்றிய செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடதக்கதாகும். நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நாராயணன், குலோத்துங்கன், மேலாளர் பாலசுப்பிரமணியன், ஒன்றியக்குழு துணைத்தலைவர் ஜீவிதா வேம்பி ரவி, கவுன்சிலர்கள் முகிலன், அருணாசலம், சத்யா, பாரதி, ராஜேஸ்வரி, சாவித்திரி, ரவிச்சந்திரன், ஏகாம்பரம், செல்வம், நளினி, அன்பரசி, செந்தில்குமார், மகேஸ்வரி, இளவரசி, சாந்தி, கஸ்துாரி தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் வேம்பி ரவி, ரவிதுரை, அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story