ஆசிரியர் வீட்டில் நகை-பணம் கொள்ளை
ஆசிரியர் வீட்டில் நகை-பணத்தை கொள்ளையடித்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
விருத்தாசலம்,
விருத்தாசலம் பெரியார் நகர் ராணி மஹால் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 37). வேப்பூர் அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி கவிதா (35). கோவிலூர் அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். நேற்று காலை கணவன்-மனைவி இருவரும் வீட்டை பூட்டிவிட்டு பள்ளிகளுக்கு சென்று விட்டு, மாலை 6.30 மணியளவில் வீடு திரும்பினர். அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு, கதவு திறந்து கிடந்தது.
இதைபார்த்து அதிர்ச்சியடைந்த இருவரும் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த பொருட்கள் சிதறிக்கிடந்தன.
அதில் வைக்கப்பட்டிருந்த 4 பவுன் நகை, ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.8 ஆயிரம் ரொக்கத்தை காணவில்லை. கணவன்-மனைவி இருவரும் காலையில் வேலைக்கு சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள் பட்டப்பகலில் வீட்டின் கதவு பூட்டுகளை உடைத்து உள்ளே புகுந்து ரூ.1½ லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story