அன்னவாசல் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவர் பதவியில் தி.மு.க. வெற்றி


அன்னவாசல் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவர் பதவியில் தி.மு.க. வெற்றி
x
தினத்தந்தி 23 Oct 2021 1:14 AM IST (Updated: 23 Oct 2021 1:14 AM IST)
t-max-icont-min-icon

அன்னவாசல் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவர் பதவியை தி.மு.க. கைப்பற்றியது.

அன்னவாசல்
அன்னவாசல் ஒன்றியக் குழுவில் மொத்தமுள்ள 20 உறுப்பினர்களில் தி.மு.க. 10, காங்கிரஸ்-1 என தி.மு.க. கூட்டணி 11 இடங்களிலும், அ.தி.மு.க. 9 இடங்களிலும் வெற்றி பெற்றன. தலைவரை தேர்வு செய்வதற்காக நேற்று நடைபெற்ற மறைமுகத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் பங்கேற்கவில்லை. ஒரு ஓட்டு செல்லாதவை ஆகும்.
எனவே, தலைவர் பதவிக்கு போட்டியிட்ட தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய 2 கட்சிகளும் சமபலத்தில் இருந்தன. அதன்பிறகு, குலுக்கல் முறையில் தலைவராக அ.தி.மு.க. வடக்கு மாவட்ட அவைத் தலைவர் ராமசாமி வெற்றி பெற்றார். அதன்பிறகு போதிய பெரும்பான்மை உறுப்பினர்கள் கலந்து கொள்ளாததால் 3 முறை துணைத் தலைவர் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.
தி.மு.க. கைப்பற்றியது
இந்நிலையில் நேற்று மதியம் அன்னவாசல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் சுருதி தலைமையில் ஒன்றியக்குழு துணைத் தலைவர் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் தி.மு.க. கூட்டணியை சேர்ந்த 11 பேரும், அ.தி.மு.க.வை சேர்ந்த 3 பேரும் கலந்து கொண்டனர். தி.மு.க. சார்பில் கல்யாணி மாரிமுத்து வேட்புமனு தாக்கல் செய்தார். பின்னர் அவரை தொடர்ந்து வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் கல்யாணி மாரிமுத்து வெற்றி பெற்றதாக தேர்தல் நடத்தும் அலுவலர் சுருதி அறிவித்தார். தி.மு.க.வெற்றி பெற்றதும் அக்கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
அப்போது ஆய்வு பணிக்கு புதுக்கோட்டை வந்திருந்த தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன், வெற்றி பெற்ற கல்யாணி மாரிமுத்துக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார். அன்னவாசல் ஒன்றியக்குழு துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட கல்யாணி அன்னவாசல் வடக்கு தி.மு.க. ஒன்றிய செயலாளர் மாரிமுத்துவின் மனைவி ஆவார்.
அறந்தாங்கி-குன்றாண்டார்கோவில்
குன்றாண்டார்கோவில் ஒன்றியத்தில் நடந்த ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தேர்தலில் கிள்ளனூர் ஊராட்சியில் 2-வது வார்டு உறுப்பினர் ஏ. தவமணி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதேபோல, செனையக்குடி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தேர்தலில் 3-வது வார்டு உறுப்பினர் தா.தாமரைச்செல்வன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அறந்தாங்கி ஒன்றியம் ராஜேந்திரபுரம், அரசர்குளம் கீழ்பாதி ஊராட்சி துணைத் தலைவர் மறைமுக தேர்தல் நடைபெற்றது. அரசர்குளம் கீழ்பாதி ஊராட்சி துணைத் தலைவராக செல்விதுரையும், ராஜேந்திரபுரம் ஊராட்சி துணைத் தலைவராக நைனாஇதயத்துல்லாவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். அரிமளம் ஒன்றியம் கும்மங்குடி ஊராட்சி மன்ற துணைத் தலைவராக கணேசன் தேர்வானார்.


Next Story