டாஸ்மாக் கடை மூடல்


டாஸ்மாக் கடை மூடல்
x
தினத்தந்தி 23 Oct 2021 1:49 AM IST (Updated: 23 Oct 2021 1:49 AM IST)
t-max-icont-min-icon

டாஸ்மாக் கடை மூடப்பட்டது.

அரியலூர்:
அரியலூரில் எருத்துக்காரன்பட்டி சாலையில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளிக்கு அருகே டாஸ்மாக் கடை செயல்பட்டு வந்தது. அந்த சாலையில் ஏராளமான வாகனங்கள், வேலைக்கு செல்லும் பெண்கள் சென்று வருகின்றனர். பள்ளி மாணவ, மாணவிகளும் அந்த வழியாகவே சென்று வருவது வழக்கம். இந்நிலையில் மாலை 6 மணிக்கு மேல் அந்த டாஸ்மாக் கடைக்கு மது வாங்க வருபவர்கள் சாலையில் வாகனங்களை நிறுத்திவிட்டு மது அருந்துவதால் போக்குவரத்துக்கு இடையூறும், பெண்களுக்கு பாதுகாப்பும் இல்லாத சூழ்நிலை உள்ளது என்றும், எனவே அந்த கடையை மூட வேண்டும் என்றும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தினத்தந்தியில் செய்தி வெளியிடப்பட்டது.
மேலும் வருகிற 1-ந் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், அந்த டாஸ்மாக் கடையால் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படுவதாகவும், எனவே அந்த டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்றும், பள்ளி மாணவி இளந்தென்றல், தனது சகோதரனுடன் வந்து கடந்த திங்கட்கிழமையன்று அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளித்தார். இதைத்தொடர்ந்து அந்த கடையை மூடுவதற்கு கலெக்டர் நடவடிக்கை எடுத்தார்.
இதைத்தொடர்ந்து அந்த டாஸ்மாக் கடையில் இருந்த மேஜை, நாற்காலி மற்றும் மது பாட்டில்களை லாரியில் ஏற்றிச்சென்றதோடு, அந்த கடையை காலி செய்து பூட்டிவிட்டு ஊழியர்கள் சென்றனர். இதையறிந்த அந்த மாணவி, டாஸ்மாக் கடையை மூட நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் நன்றி தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் உள்ள மதுக்கடைகளை அகற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

Next Story