போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர் வான்கடே வேலையிழந்து, ஜெயிலில் அடைக்கப்படுவார்; மந்திரி நவாப் மாலிக் ஆவேசம்
போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர் வான்கடே வேலையிழந்து, ஜெயிலில் அடைக்கப்படுவார் என மந்திரி நவாப் மாலிக் ஆவேசமாக கூறியுள்ளார்.
மும்பை,
போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர் வான்கடே வேலையிழந்து, ஜெயிலில் அடைக்கப்படுவார் என மந்திரி நவாப் மாலிக் ஆவேசமாக கூறியுள்ளார்.
ஜெயிலுக்கு போவது உறுதி
நடிகர் சுஷாந்த் சிங் மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை தொடங்கப்பட்டது. எனினும் விசாரணையில் சுஷாந்த் சிங் மரணத்தில் உள்ள மர்மம் அவிழ்க்கப்படவில்லை. இதையடுத்து போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் இந்தி திரையுலகத்திற்கும், போதைப்பொருள் கும்பலுக்கும் உள்ள தொடர்பு குறித்து விசாரணையை தொடங்கினர்.
அப்போது மும்பை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரியாக நியமிக்கப்பட்டவர் தான் சமீர் வான்கடே. இவர் சமீபத்தில் சொகுசு கப்பலில் சோதனை நடத்தி நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்டவர்களை கைது செய்தார். மேலும் கடந்த ஜனவரி மாதம் மந்திரி நவாப் மாலிக் மருமகனையும் போதைப்பொருள் வழக்கில் கைது செய்து ஜெயிலில் அடைத்தார்.
மந்திரி ஆவேசம்
இந்தநிலையில் சமீர் வான்கடே மீது நவாப் மாலிக் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறிவருகிறார். இதில் அவர் புனே மாவட்டம் மாவல் தாலுகாவில் நடந்த நிகழ்ச்சியில் பேசியதாவது:-
சமீர் வான்கடே எவ்வளவு போலியானவர் என்பதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது. அவரும், அவரது தந்தையும் போலிகள். அவரது போலி தன்மை நிரூபிக்கப்பட்ட பிறகு அவரால் ஒரு நாள் கூட வேலையில் இருக்க முடியாது. அவர் ஜெயிலுக்கு போவது உறுதி. அனைத்து ஆதாரங்களையும் நாங்கள் வெளிக்கொண்டு வருவோம். நான் எதுவும் செய்யவில்லை என அவர் எனக்கு குறுந்தகவல் அனுப்புகிறார். அப்படியென்றால் யார் செய்தது என எங்களிடம் சொல்ல வேண்டும்.
மேலிடத்தில் இருந்து அழுத்தம் வருவதாக கூறுகிறார். உங்களது தந்தை தான் அழுத்தம் தருகிறாரா என சொல்லுங்கள். சமீர் வான்கடேவுக்கு நான் சவால் விடுகிறேன். ஒரு ஆண்டில் அவரது வேலை பறிபோகும். எங்களை ஜெயிலில் போட நீங்கள் வந்தீர்கள். ஆனால் நீங்கள் ஜெயிலுக்கு போவதை மக்கள் பார்ப்பார்கள். எனக்கு யாருக்கும் பயமில்லை. உங்களை ஜெயிலுக்கு அனுப்பும் வரை நான் அமைதியாக உட்கார மாட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
போலி வழக்கு
முன்னதாக மும்பையில் பேசிய மந்திரி நவாப் மாலிக், சுஷாந்த் சிங் மரணத்திற்கு பிறகு போதைப்பொருள் தடுப்பு பிரிவு இந்தி சினிமா உலகில் விளையாட்டை தொடங்கியதாக கூறினார். இதேபோல சுஷாந்த் சிங் மரணத்தில் நடிகை ரியா சக்கரவர்த்தி மீது பதியப்பட்டது போலி வழக்கு என்றும், சொகுசு கப்பலில் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுவதும் போலி என கூறினார்.
வெறும் வாட்ஸ்அப் சாட்டை வைத்து ஆர்யன் கான் உள்ளிட்டவர்களை போதைப்பொருள் தடுப்பு பிரிவு கைது செய்ததாகவும் குற்றம்சாட்டினார். இதேபோல போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரியின் வெளிநாட்டு பயணங்கள் குறித்தும் கேள்வி எழுப்பி இருந்தார்.
மந்திரி நவாப் மாலிக்கின் இந்த குற்றச்சாட்டுகளை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர் வான்கடே மறுத்து உள்ளார்.
இதற்கிடையே சமீர் வான்கடேவுக்கு எதிராக மாநில அரசு விசாரணை எதையும் தொடங்காது என உள்துறை மந்திரி திலீப் வால்சே பாட்டீல் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story