புதிதாக முளைக்கும் தற்காலிக தரைக்கடைகள்


புதிதாக முளைக்கும் தற்காலிக தரைக்கடைகள்
x
தினத்தந்தி 22 Oct 2021 8:47 PM GMT (Updated: 22 Oct 2021 8:47 PM GMT)

தீபாவளி பண்டிகையையொட்டி புத்தாடை விற்பனைக்காக புதிதாக தற்காலிக தரைக்கடைகள் அமைக்கப்பட்டு வருகிறது.

தஞ்சாவூர்;
தீபாவளி பண்டிகையையொட்டி புத்தாடை விற்பனைக்காக புதிதாக தற்காலிக தரைக்கடைகள் அமைக்கப்பட்டு வருகிறது.
தீபாவளி பண்டிகை
இந்துக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளி பண்டிகை அடுத்தமாதம் (நவம்பர்) 4-ந் தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. தீபாவளி என்றாலே புத்தாடை, பட்டாசுகள் தான் ஞாபகத்திற்கு வரும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் அதிகாலையில் எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடை அணிவார்கள். பின்னர் பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். இதனால் தீபாவளிக்கு 1 மாதத்திற்கு முன்பே புத்தாடைகள் வாங்குவதற்காக கடைகளை நோக்கி மக்கள் செல்வார்கள்.
தஞ்சை மாநகரில் தீபாவளி விற்பனை களை கட்ட தொடங்கி இருக்கிறது. இதனால் தஞ்சை காந்திஜிசாலை, கீழவாசல் செல்லும் சாலையில் உள்ள துணிக்கடைகளில் புத்தாடை வாங்குவதற்காக மக்கள் அதிகஅளவில் வர தொடங்கி உள்ளனர். தஞ்சை மட்டுமின்றி தஞ்சையை சுற்றியுள்ள கிராமப்புறங்களில் இருந்தும் மக்கள் வந்து செல்கின்றனர்.
தற்காலிக தரைக்கடைகள்
புத்தாடை எடுத்தவர்கள் பட்டாசு கடைகள், சுவீட் கடைகளுக்கு செல்வதால் அங்கேயும் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறது. புத்தாடை எடுக்க கார்கள், இருசக்கர வாகனங்களில் பலர் வருவதால் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த திலகர் திடல், அண்ணாசாலை, காந்திஜிசாலையில் வாகன நிறுத்தும் இடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கடை வீதிகளில் கூடும் மக்களிடம் கொரோனா குறித்தும், திருடர்கள் குறித்தும் ஒலிப்பெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஜவுளிக்கடைகள் மட்டுமின்றி சாலையோரங்களில் தற்காலிக தரைக்கடைகள் அமைக்கப்பட்டு, புத்தாடைகள் விற்பனை செய்யப்படுவது வழக்கம். அதேபோல் அண்ணாசாலை பகுதியில் சாலையோரம் தற்காலிக தரைக்கடைகள் புதிதாக முளைக்க தொடங்கி உள்ளன. இங்கு சிறுவர்களுக்கான துணிகள் அதிகஅளவில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.
கொட்டகை
இதேபோல் தஞ்சை பழைய பஸ் நிலையம் முன்பும், யூனியன் கிளப்பாக செயல்பட்டு வந்த மாநகராட்சிக்கு சொந்தமான இடத்திலும் தகரத்தால் ஆன கொட்டகை அமைத்து தரைக்கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் சில கடைகளில் வியாபாரம் நடைபெற்று வருகிறது.
பல கடைகள் காலியாக கிடக்கின்றன. இன்னும் ஓரிரு நாட்களில் தெற்குஅலங்கம், தெற்குவீதி, கீழவாசல் உள்ளிட்ட பகுதிகளிலும் தரைக்கடைகள் அமைக்கப்பட்டு வியாபாரம் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற நாட்களை விட விடுமுறை நாட்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

Next Story