தலையில் கல்லைப்போட்டு 2 பேர் படுகொலை
பெங்களூரு அருகே தலையில் கல்லைப்போட்டு வியாபாரி உள்பட 2 பேர் படுகொலை செய்யப்பட்டனர். தலைமறைவான மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
பெங்களூரு: பெங்களூரு அருகே தலையில் கல்லைப்போட்டு வியாபாரி உள்பட 2 பேர் படுகொலை செய்யப்பட்டனர். தலைமறைவான மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
2 பேர் கொலை
பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆனேக்கல் தாலுகா மாயசந்திராவை சேர்ந்தவர் தீபக்(வயது 45). இவரது நண்பர் அத்திபெலேயை சேர்ந்த பாஸ்கர்(36). இவர்களில் தீபக் கூலி வேலையும், பாஸ்கர் காய்கறி வியாபாரமும் செய்து வந்தனர். நேற்று முன்தினம் மாலையில் அத்திபெலே போலீஸ் எல்லைக்கு உட்பட்ட டி.வி.எஸ். ரோட்டில் தீபக், பாஸ்கர் தங்களது மோட்டார் சைக்கிள்களில் சென்று கொண்டு இருந்தார்கள்.
அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் 2 பேரையும் வழிமறித்து ஆயுதங்களால் சரமாரியாக தாக்கினார்கள். இதனால் மோட்டார் சைக்கிள்களில் இருந்த 2 பேரும் கீழே விழுந்தார்கள். அந்த சந்தர்ப்பத்தில் தீபக், பாஸ்கர் ஆகியோரின் தலைகளில் மர்மநபர்கள் கல்லை தூக்கி போட்டதாக தெரிகிறது. இதில், பலத்தகாயம் அடைந்த 2 பேரும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
போலீசார் விசாரணை
நேற்று முன்தினம் நள்ளிரவு வரை தீபக்கும், பாஸ்கரும் வீட்டுக்கு வராததால், அவர்களது குடும்பத்தினர் அக்கம் பக்கத்தில் தேடியும், விசாரித்தும் பார்த்தாா்கள். ஆனால் அவர்களை பற்றிய எந்த தகவலும் குடும்பத்தினருக்கு கிடைக்கவில்லை. இந்த நிலையில், நேற்று அதிகாலையில் டி.வி.எஸ். ரோட்டில் தீபக், பாஸ்கர் ஆகியோர் கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி அத்திபெலே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனே சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து தீபக், பாஸ்கரின் உடல்களை கைப்பற்றி விசாரித்தனர். மேலும் தகவல் அறிந்ததும் பெங்களூரு புறநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வம்சி கிருஷ்ணா மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டார்கள்.
மா்மநபா்களுக்கு வலைவீச்சு
அப்போது தீபக், பாஸ்கரை ஆயுதங்களால் தாக்கியும், அவா்களது தலைகளில் கல்லைப்போட்டும் மா்மநபர்கள் கொலை செய்திருப்பது தெரியவந்தது. மேலும் பணப்பிரச்சினை அல்லது முன்விரோதம் காரணமாக 2 பேரையும், அவர்களுக்கு தெரிந்த நபர்களே கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இருப்பினும் வேறு ஏதாவது காரணமா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து அத்திபெலே போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் தலைமறைவாகி விட்ட மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள். இந்த இரட்டை கொலை சம்பவம் அத்திபெலேயில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story