தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 23 Oct 2021 2:36 AM IST (Updated: 23 Oct 2021 2:36 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டி

உடனடி நடவடிக்கை
சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் பேரூராட்சி 7-வது வார்டு கம்போஸ்ட் ரோட்டில் தெருவிளக்குகள் 4 மாதங்களாக எரியவில்லை. இதுபற்றி புகார் தெரிவித்தும் மின்வாரிய அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இரவு நேரங்களில் பொதுமக்கள், குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகிறார்கள் என்ற செய்தி நேற்று ‘தினத்தந்தி’ யில் புகார் பெட்டி பகுதியில் வெளியானது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் உடனடியாக நடவடிக்கை எடுத்தனர். அதன் பயனாக அந்த பகுதியில் தெருவிளக்குகள் சரிசெய்யப்பட்டு எரிய விடப்பட்டன. தெருவிளக்குகள் எரிய செய்த மின்வாரிய அதிகாரிகளுக்கும், அதற்கு உறுதுணையாக செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’ க்கும்அந்த பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
-சேவி, ஜலகண்டாபுரம், சேலம்.
பயன்பாடு இல்லாத நூலகம் 
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி தாலுகா ஏரகிரியான் கொட்டாய் கிராமத்தில் ரேஷன் கடை மற்றும் நூலகம் அமைந்துள்ளது. இங்கு கால்நடைகள் கட்டுவது மட்டும் இல்லாமல் அவற்றிற்கு தீவனம் வைக்கும் இடமாகவும் அவை மாறிவிட்டது. இதுதவிர அந்த பகுதி சில சமூக விரோத செயல்கள் நடக்கும் இடமாகவும் மாறிவிட்டது. இதில் அதிகாரிகள் தனிகவனம் செலுத்தி பயன்பாடு இல்லாத இந்த நூலகத்தை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஊர்பொதுமக்கள், தர்மபுரி.
வீடுகளில் புகும் கழிவுநீர்
சேலம் தெற்கு 58-வது வார்டில் பாட்டப்பன் காடு பகுதியில் உள்ள பொதுக்கழிப்பறையின் கழிவுநீர் அங்குள்ள சாக்கடை கால்வாயில் கலந்துவிடுகிறது. இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் வீடுகள் பள்ளத்திலும், உயரமான பகுதியில் சாக்கடை கால்வாய்களும் உள்ளதால் வீடுகளில் உள்ள கழிவுநீர் வெளியேறாமல் ஆங்காங்கே தேங்கி கிடக்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி உள்ளது.இதனால் இந்தப் பகுதியில் சுகாதார கேடு ஏற்படுவதுடன் பொதுமக்களுக்கு நோய் பரவும் நிலை உருவாகியுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக பொது கழிப்பறையின் கழிவு நீரை முறையாக கழிவுநீர் தொட்டியில் (செப்டிக் டேங்கில்) சேகரித்து அவற்றை சரியான முறையில் வாகனங்கள் மூலம் அப்புறப்படுத்த துரிதமாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.
-ஊர்மக்கள், சேலம்.
சுற்றுசுவர் இல்லாத கிணறு
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா திருவெண்காடு பகுதியில் சுற்றுச்சுவர் இல்லாமல் கிணறு ஒன்று உள்ளது. மேலும் அங்கு புதர்கள் நிறைந்த நிலையில் அருகில் பாழடைந்த குடிநீர் தொட்டியும், சாய்ந்த நிலையில் மின்கம்பமும் உள்ளன. இதனால் அந்தபகுதி முழுமையாக விஷப்பூச்சிகளின் கூடாரமாக மாறி விட்டது. அசம்பாவிதங்களை தவிர்க்க இதுபற்றி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே பொதுமக்களின் நலன் கருதி கிணறை மூடவும், குடிநீர்தொட்டியை பராமரிக்கவும், மின்கம்பத்தை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வ.கார்த்திகேயன், திருவெண்காடு, நாமக்கல்.
நோய் பரவும் அபாயம்
சேலம் சன்னியாசிகுண்டு மெயின் ரோட்டில் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் சாக்கடை நீர் வெளியேறி சாலை மற்றும் வீட்டின் முன்புறத்தில் தேங்கி நிற்கிறது. மழைக்காலம் என்பதால் மழைநீருடன் சாக்கடை நீர் கலந்துவிடுவதால் கொசுத்தொல்லை, அதிகமாகி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அந்த கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஊர்மக்கள், சன்னியாசிகுண்டு, சேலம்.
சேலம் மாவட்டம் வீராணம் ஊராட்சி, வீமனூர் கிராம பகுதியில் 5 ஆண்டுகளுக்கு மேல் சாக்கடை கால்வாய் மற்றும் சாலையும் பழுதடைந்து உள்ளது. மழைக்காலம் என்பதால் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து விடுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. நோய் பரவும் அபாயம் உள்ளதால் அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்தால் நல்லது.
-ஊர்மக்கள், வீமனூர், சேலம்.
சுகாதார வளாகம் அமைக்கப்படுமா?
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதற்காக கட்டுமான பணிகள் தொடங்கியது. இதன் காரணமாக வட்டார வளர்ச்சி அலுவலக பஸ் நிறுத்தத்தில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு சுகாதார வளாகம் அமைக்கப்படவில்லை. இதனால் பெண்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் பெண்கள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி தற்காலிக பஸ் நிலையத்தில் சுகாதார வளாக வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும்.
-ராம், தர்மபுரி.
மேல்நிலை நீர்தேக்க தொட்டி வேண்டும்
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பொத்தனூர் பேரூராட்சி 1-வது வார்டில் உள்ள கிணற்று நீர் ஏற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி (டேங்க்) பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டன. எனவே மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து அதனை சரி செய்ய வேண்டும்.
-ஊர்மக்கள், பொத்தனூர், நாமக்கல்.
சாலையில் பள்ளம்
சேலம் ரெயில்வே சந்திப்பு பிரதான சாலை ராம்தியேட்டர் பஸ் நிறுத்தத்தில் சாலை நடுவில் குடிநீர் குழாய் சரி செய்ய பள்ளம் தோண்டப்பட்டன. குடிநீர் குழாய் சரி செய்த பணியாளர்கள் அதனை சரியாக மூடாமல் சென்றுவிட்டனர். இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகவும் சிரமப்படுகின்றனர். மழைக்காலம் என்பதால் அந்த குழியில் மழைநீர் நிரம்பி இருப்பதால் வாகன ஓட்டிகள் எதிர்பாராதவிதமாக அதில் விழுந்து காயம் அடைகின்றனர். இந்த குழியால் இப்படி அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே உயிர்ப்பலி ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து அதனை சரி செய்ய வேண்டும்.
-மணிகண்டன், சேலம்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுகா தோக்கவாடி பஞ்சாயத்து ஸ்ரீஅம்பாள் நகரில் சாலை ஓரத்தில் திடீர் திடீரென்று பள்ளங்கள் தோன்றுகின்றன. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அந்த பள்ளங்களில் சிக்கி காயம் அடைகின்றனர். இதனால் சாலையில் செல்ல வாகன ஓட்டிகள் அச்சம் அடைகின்றனர். எனவே அசம்பாவிதங்கள் நடக்கும் முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-ராஜேஷ், அம்பாள் நகர், நாமக்கல்.
கிருஷ்ணகிரி அருகே அவதானப்பட்டி மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கிருந்த வேங்கான் கொட்டாய் வரை உள்ள தார் சாலை பழுதடைந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சாலையில் செல்ல முடியாமல் மிகவும் சிரமப்படுகிறார்கள். இரவு நேரத்தில் இந்த சாலைகளில் செல்லும் பலரும் விபத்துகளில் சிக்குகிறார்கள். எனவே பழுதடைந்த அந்த சாலையை சீரமைத்து தர வேண்டும்.
-ஷாஜகான், கிருஷ்ணகிரி.
வேகத்தடைகள் சீரமைக்கப்படுமா?
கிருஷ்ணகிரி நகரில் கோ-ஆப்ரேட்டிவ் காலனி செல்லும் பாதையில் 4 சாலைகள் சந்திப்பு பகுதி உள்ளது. இந்த இடத்தில் வேகத்தை குறைப்பதற்காக வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வேகத்தடைகள் சேதமடைந்து உள்ளன. இதனால் அந்த வழியாக இரவில் செல்லும் பல இரு சக்கர வாகனங்களும் விபத்துகளில் சிக்குகிறார்கள். மேலும் வேகத்தடை இருப்பதற்கான அறிகுறிகளும் அந்த பகுதியில் இல்லை. எனவே அந்த பகுதியில் உள்ள வேகத்தடையை சீரமைக்க வேண்டும்.
-ராஜூ, கிருஷ்ணகிரி.

Next Story