கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் கொலை; மனைவி உள்பட 5 பேர் கைது


கைதான மம்தா உள்பட 3 பேரை படத்தில் காணலாம்.
x
கைதான மம்தா உள்பட 3 பேரை படத்தில் காணலாம்.
தினத்தந்தி 23 Oct 2021 2:36 AM IST (Updated: 23 Oct 2021 2:36 AM IST)
t-max-icont-min-icon

வாலிபர் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பமாக கள்ளத்தொடர்பு விவகாரத்தில் கழுத்தை நெரித்து கொலை செய்த மனைவி உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

உடுப்பி:வாலிபர் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பமாக கள்ளத்தொடர்பு விவகாரத்தில் கழுத்தை நெரித்து கொலை செய்த மனைவி உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

வாலிபர் தற்கொலை

சிவமொக்காவை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 36). இவரும் அதேப்பகுதியை சேர்ந்த மம்தா (34) என்பவரும் காதலித்து கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர். இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். நாகராஜ் தனது குடும்பத்துடன் உடுப்பி மாவட்டம் பைந்தூர் தாலுகா சங்கரநாராயணா போலீஸ் எல்லைக்குட்பட்ட அம்பாரு அருகே மூடாஜே விவேக் நகரில் வசித்து வந்தார். 

நாகராஜ் மது அருந்தும் பழக்கத்துக்கு அடிமையாகி இருந்ததாக தெரிகிறது. இதனால் அவர் தினமும் வீட்டில் அமர்ந்து மது அருந்தி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 18-ந்தேதி நாகராஜ் வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மம்தா, தனது கணவர் தற்கொலை செய்துகொண்டதாக, சங்கரநாராயணா போலீசில் தெரிவித்தார். 

சாவில் சந்தேகம்

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் தற்கொலை செய்துகொண்ட நாகராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் மம்தாவிடம் விசாரித்தபோது, அளவுக்கு அதிகமாக மது அருந்தும் பழக்கத்துக்கு அடிமையாகி இருந்த நாகராஜ், வாழ்க்கையில் விரக்தி அடைந்து தற்கொலை செய்துகொண்டதாக தெரிவித்தார். 

இதையடுத்து போலீசார், நாகராஜின் உடலை அவருடைய குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். சிவமொக்காவில் இருந்து வந்த நாகராஜின் சகோதரி நாகரத்னா மற்றும் உறவினர்கள் உடலை பெற்றுக்கொண்டனர். அப்போது நாகராஜின் உடல் மற்றும் கழுத்தில் காயங்கள் இருந்தன. இதனால் அவருடைய சாவில் குடும்பத்தினருக்கு சந்தேகம் எழுந்தது. 

கொலை

இதுகுறித்து நாகராஜின் சகோதரி நாகரத்னா, சங்கரநாராயணா போலீசில் புகார் கொடுத்தார். அதில், கடந்த சில தினங்களுக்கு முன்பு நாகராஜ் தனக்கு போன் செய்து மனைவியும், வேறு சிலரும் சேர்ந்து தன்னை தாக்கியதாக தெரிவித்தார். தற்போது அவர் தற்கொலை செய்திருப்பதாக கூறுவது சந்தேகமாக உள்ளது. மம்தா மற்றும் வேறு சிலர் நாகராஜை கொலை செய்திருக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதற்கிடையே பிரேத பரிசோதனை அறிக்கையிலும் நாகராஜ் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. 

இதனால் சங்கரநாராயணா போலீசார் இதனை கொலை வழக்காக மாற்றி விசாரணையை தொடங்கினர். இதையடுத்து போலீசார் மம்தாவை பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினார்கள். அப்போது, அவர் தனது கணவரை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். 

கள்ளத்தொடர்புக்கு இடையூறு

மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், மம்தாவுக்கும் வேறொருவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதுபற்றி அறிந்ததும் நாகராஜ், மனைவியை கண்டித்து உள்ளார். இதனால் மம்தா, கள்ளத்தொடர்புக்கு இடையூறாக உள்ள நாகராைஜ கொலை செய்ய முடிவு செய்தார். அதன்படி மம்தா, அதேப்பகுதியை சேர்ந்த குமார், தினகரன் மற்றும் 2 சிறுவர்களுடன் சேர்ந்து கடந்த 19-ந்தேதி நாகராஜை கழுத்தை நெரித்து கொலை செய்தார். 

பின்னர், அவருடைய உடலை தூக்கில் தொங்க விட்டு தற்கொலை செய்துகொண்டதாக நாடகமாடியது தெரியவந்தது. 
இதையடுத்து போலீசார் நாகராஜின் மனைவி மம்தா, குமார், தினகரன் மற்றும் 2 சிறுவர்கள் ஆகிய 5 பேரையும் கைது செய்தனர். 2 சிறுவர்களும் சிறார் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் மம்தா உள்பட 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story