ஊத்தங்கரை அருகே ஏரி நிரம்பி ஊருக்குள் வெள்ளம் புகுந்தது-60 வீடுகளுக்குள் மழைநீர் சென்றதால் பொதுமக்கள் அவதி


ஊத்தங்கரை அருகே ஏரி நிரம்பி ஊருக்குள் வெள்ளம் புகுந்தது-60 வீடுகளுக்குள் மழைநீர் சென்றதால் பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 23 Oct 2021 4:41 PM IST (Updated: 23 Oct 2021 4:41 PM IST)
t-max-icont-min-icon

ஊத்தங்கரை ஒன்றியம் எக்கூர் ஊராட்சி சாமாச்சி கொட்டாய் காலனி பகுதியில் ஏரி நிரம்பி ஊருக்குள் வெள்ளம் புகுந்தது. 60 வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து தேங்கி நின்றதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

ஊத்தங்கரை:
ஊத்தங்கரை ஒன்றியம் எக்கூர் ஊராட்சி சாமாச்சி கொட்டாய் காலனி பகுதியில் ஏரி நிரம்பி ஊருக்குள் வெள்ளம் புகுந்தது. 60 வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து தேங்கி நின்றதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
ஏரி நிரம்பியது
ஜவ்வாது மலையில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்தது. இதனால்  மலையில் இருந்து மழைநீர் சிம்மனபுதூர் தடுப்பணைக்கு வந்தது. அந்த தடுப்பணை நிரம்பி அங்கிருந்து எக்கூர் ஊராட்சி பூசாகவுண்டன் ஏரிக்கு மழைநீர் வந்தது.
இந்த நிலையில் இந்த ஏரியும் நிரம்பியது. இதையடுத்து சாமாச்சிகொட்டாய் காலனி பகுதியில் உள்ள இந்த ஏரியின் கரையை கடந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது. ஏரிைய அடுத்துள்ள 250 ஏக்கர் விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்து நெல், கரும்பு, மஞ்சள் உள்ளிட்ட பயிர்கள் சேதம் அடைந்தன. மேலும் சாமாச்சி கொட்டாய் ஊருக்குள் வெள்ளம் புகுந்ததில் அங்குள்ள 60 வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததுடன், தெரு எங்கும் தண்ணீர் காடாக காட்சி அளித்தது. இதனால் கிராம பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். இந்த சம்பவம் கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் மழைநீர் படிப்படியாக வடிய தொடங்கியது.
அதே நேரத்தில் மற்றொரு கரை நிரம்பி அங்கிருந்து அமட்டன்குட்டைக்கு தண்ணீர் வந்து கரை உடையும் நிலையில் உள்ளது. 
ஒன்றியக்குழு தலைவர் ஆய்வு
இது குறித்து தகவல் அறிந்ததும் ஒன்றியக்குழு தலைவர் உஷாராணி குமரேசன், துணைத்தலைவர் சத்தியவாணி செல்வம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவப்பிரகாசம், மகேஷ்குமரன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். உடன் பொறியாளர் ஜமுனா, ஒன்றிய பணி மேற்பார்வையாளர் சம்பத், ஒன்றியக் குழு உறுப்பினர் சிவகாமி ராமகிருஷ்ணன், ஊராட்சி மன்ற தலைவர் ஈஸ்வரி ஜெயராமன், துணைத்தலைவர் கார்த்திகேயன், ஊராட்சி செயலாளர் கிருபாகரன், ஒப்பந்ததாரர் பெருமாள் சாமி, வெங்கட்ராமன், செல்வம், உதயகுமார், டேவிட், கணேசன் ஆகியோர் உடன் இருந்தனர். 
அதைத்தொடர்ந்து பூசா கவுண்டன் ஏரி தண்ணீர் ஊருக்குள் வராத வகையில் தடுப்பு சுவர் அமைக்கவும், தார் சாலையில் 3 இடங்களில் சிறு பாலம் அமைக்கவும் திட்ட மதிப்பீடு தயார் செய்யவும், அமட்டன் குட்டை கரை உடையாத வகையில் கால்வாயை உடனே சீரமைக்கவும், ஒன்றியக்குழு தலைவர் உஷாராணி குமரேசன் அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.

Next Story