தர்மபுரியில் தப்பி ஓடிய கொலை வழக்கு கைதி போலீசாரிடம் பிடிபட்டார்-விசாரணைக்கு பின் சிறையில் அடைப்பு


தர்மபுரியில் தப்பி ஓடிய கொலை வழக்கு கைதி போலீசாரிடம் பிடிபட்டார்-விசாரணைக்கு பின் சிறையில் அடைப்பு
x
தினத்தந்தி 23 Oct 2021 5:04 PM IST (Updated: 23 Oct 2021 5:04 PM IST)
t-max-icont-min-icon

தர்மபுரியில் தப்பி ஓடிய கொலை வழக்கு கைதி போலீசாரிடம் பிடிபட்டார். அவர் விசாரணைக்கு பின் நேற்று தர்மபுரி சிறையில் அடைக்கப்பட்டார்.

தர்மபுரி:
தர்மபுரியில் தப்பி ஓடிய கொலை வழக்கு கைதி போலீசாரிடம் பிடிபட்டார். அவர் விசாரணைக்கு பின் நேற்று தர்மபுரி சிறையில் அடைக்கப்பட்டார்.
தப்பி ஓடிய கைதி
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே உள்ள குஞ்சிகிரி பாளையத்தை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 37). இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு குடும்ப தகராறில் தனது மனைவியை கொலை செய்ததாக கூறப்படுகிறது. இந்த கொலை வழக்கு தொடர்பாக இவரை தளி போலீசார் கைது செய்து தேன்கனிக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள்.
இதைத்தொடர்ந்து தர்மபுரி சிறையில் அடைப்பதற்காக நேற்று முன்தினம் இரவு கார்த்திக்கை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் இளையமூர்த்தி, போலீஸ் ஏட்டு அசோகன், போலீஸ்காரர் ராஜ்குமார் ஆகியோர் காரில் அழைத்து வந்தனர்.
தர்மபுரி சிறை முன்பு காரில் இருந்து இறங்கும் போது பாதுகாப்புக்கு வந்த போலீஸ்காரரை கண்ணிமைக்கும் நேரத்தில் கீழே தள்ளிய கார்த்திக் கைவிலங்குடன் அருகே உள்ள புதர் பகுதிக்குள் தப்பி ஓடினார்.
பிடிபட்டார்
இதுபற்றி உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் உத்தரவுபடி தர்மபுரி, அதியமான்கோட்டை, இண்டூர் ஆகிய போலீஸ் நிலையங்களைச்சேர்ந்த 3 தனிப்படை போலீசார் உடனடியாக தீவிர தேடுதல் வேட்டையை தொடங்கினார்கள். தர்மபுரி டவுன் போலீசார் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் தர்மபுரி- ஓசூர் சாலையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரி அருகே கார்த்திக் பதுங்கி இருப்பது தெரியவந்தது. நேற்று அதிகாலை போலீசார் கார்த்திகை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவரை கைது செய்து தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்கள்.
இதைத்தொடர்ந்து கார்த்திக்கை தர்மபுரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி தர்மபுரி சிறையில் நேற்று அடைத்தனர். தர்மபுரியில் போலீசாரிடம் இருந்து தப்பி ஓடிய கொலை வழக்கு கைதி 6 மணி நேரத்தில் போலீசாரிடம் பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story