வாகனங்களை நிறுத்தி சுற்றுலா பயணிகளுக்கு தடுப்பூசி
வெளியிடங்களில் இருந்து ஊட்டிக்கு வந்த வாகனங்களை நிறுத்தி சுற்றுலா பயணிகளுக்கு தடுப்பூசி செலுத்த நகராட்சி ஆணையாளர் சரஸ்வதி நடவடிக்கை எடுத்தார்.
ஊட்டி
வெளியிடங்களில் இருந்து ஊட்டிக்கு வந்த வாகனங்களை நிறுத்தி சுற்றுலா பயணிகளுக்கு தடுப்பூசி செலுத்த நகராட்சி ஆணையாளர் சரஸ்வதி நடவடிக்கை எடுத்தார்.
மெகா தடுப்பூசி முகாம்
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் முடுக்கி விடப்பட்டு, அனைத்து பகுதிகளுக்கும் எவ்வித தட்டுப்பாடும் இன்றி பகிர்ந்தளிக்கப்பட்டு செலுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நேற்று மாவட்டம் முழுவதும் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது.
ஊட்டி நகராட்சியில் 40 மையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் என 360 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது.
மேலும் 20 நடமாடும் வாகனங்கள் மூலம் தடுப்பூசி செலுத்தப்பட்டது. நேற்று நடந்த முகாமில் நீலகிரியில் 38 ஆயிரத்து 500 பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. கொரோனா தடுப்பூசி போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டு உள்ளது.
சுற்றுலா பயணிகள்
ஊட்டி-குன்னூர் சாலை லவ்டேல் சந்திப்பு பகுதியில் உள்ள போலீஸ் உதவி மையத்தில் தடுப்பூசி முகாம் நடந்தது. அப்பகுதியில் நகராட்சி ஆணையாளர் சரஸ்வதி ஆய்வு செய்தபோது கட்டுமான பணியில் முதல் டோஸ் செலுத்தாமல் வடமாநில தொழிலாளர்கள் பணிபுரிந்தது தெரியவந்தது. உடனடியாக அவர்கள் தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து அவர்கள் உதவி மையத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி செலுத்தினர். மேலும் வெளிமாநில, பிற மாவட்ட சுற்றுலா பயணிகள் வந்த வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு, தடுப்பூசி செலுத்தி உள்ளார்களா என்று சான்றிதழ்களை ஆணையாளர் மற்றும் ஊழியர்கள் சரிபார்த்தனர். தடுப்பூசி செலுத்தாத சுற்றுலா பயணிகளுக்கு அங்கேயே கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
பரிசுகள்
பள்ளிகளில் நடந்த தடுப்பூசி முகாமை மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, ஊட்டி சப்-கலெக்டர் மோனிகா ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
18 வயது நிரம்பி தடுப்பூசி செலுத்தி கொண்ட இளைஞர்களுக்கு பரிசுகள் மற்றும் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ்களை வழங்கினார். பிறப்புச் சான்றிதழ், பள்ளி கல்வி சான்றிதழ் என ஏதாவது ஒன்றை காண்பித்து தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம். 18 வயது நிரம்பி தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு குலுக்கல் முறையில் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.
கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மெகா கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் ஆர்வத்துடன் பங்கேற்று தடுப்பூசி போட்டுக்கொண்டனர். முதல் டோஸ் தடுப்பூசி போட வந்தவர்களுக்கு ஊக்கப்பரிசு வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story