வகுப்பறைகளை சுத்தம் செய்யும் பணி தீவிரம்


வகுப்பறைகளை சுத்தம் செய்யும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 23 Oct 2021 6:44 PM IST (Updated: 23 Oct 2021 6:44 PM IST)
t-max-icont-min-icon

ஊட்டியில் தொடக்க, நடுநிலை பள்ளிகளில் வகுப்பறைகளை சுத்தம் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

ஊட்டி

ஊட்டியில் தொடக்க, நடுநிலை பள்ளிகளில் வகுப்பறைகளை சுத்தம் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

வானொலி மூலம் பாடங்கள்

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பரவல் காரணமாக 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள தொடக்க, நடுநிலை பள்ளிகள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் மூடப்பட்டு உள்ளன. கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேல் திறக்கப்படாமல் மூடிய நிலையில் காணப்படுகிறது. இதனால் மாணவ-மாணவிகள் வீடுகளில் இருந்தபடியே பாடங்களை படித்து வருகின்றனர். அவர்களது கல்வி தடைபடாதவகையில் கல்வி வானொலி மூலம் பாடங்கள் கற்பிக்கப்பட்டு வந்தது.

அந்தந்த பள்ளி ஆசிரியர்கள் மாணவ-மாணவிகளின் வீடுகளுக்கு நேரடியாக சென்று பாடங்களை படித்து வருகிறார்களா என்று ஆய்வு செய்தனர். மேலும் பாடங்களும் கற்பித்தனர். 

நேரடி வகுப்புகள்

இந்த கல்வி ஆண்டுக்கான பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை வருகிற 1-ந் தேதி முதல் பள்ளிகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி நீலகிரியில் 200-க்கும் மேற்பட்ட அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் வருகிற 1-ந் தேதி முதல் நேரடி வகுப்புகள் தொடங்குகிறது.

இதையொட்டி பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிகளை தூய்மை செய்து தயார் நிலையில் வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 

அடிப்படை வசதிகள்

இதனால் ஊட்டி ஆர்.கே.புரம் நகராட்சி நடுநிலைப்பள்ளி, அப்பர் பஜார் நகராட்சி நடுநிலைப்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளிகளில் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மூடப்பட்டு இருந்ததால் பள்ளி வகுப்பறைகள், வளாகம் போன்ற இடங்கள் தண்ணீர் தெளித்து சுத்தம் செய்யப்பட்டு வருகின்றன.

சுற்றுப்புற பகுதிகளில் வளர்ந்து காணப்படும் புதர் செடிகள் வெட்டி அப்புறப்படுத்தப்படுகிறது. மேஜைகள், இருக்கைகள் போன்றவை கழுவி சுத்தம் செய்யப்படுகிறது. அதேபோல் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள வகுப்பறைகளில் முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கழிப்பறைகள், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் சரியாக உள்ளதா என்று ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.


Next Story